தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுசில் பிரேமஜயந்த

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இணையவழி மூலமாக கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்திலிருந்து இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று தொலைநோக்குக் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று பூகோள மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் ஒரு சில நாடுகளில் தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. 

நாட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையையும் நாம் வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த போதிலும், தமிழ் சிங்களப் புதுவருடத்தின் பின்னர் ஏற்பட்ட 'புதுவருடக் கொத்தணி' பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்கும் அதேவேளை, கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் இந்தத் தடுப்பூசிகளை நன்கொடை அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் பெற்று வந்திருக்கின்றோம்.

கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமாத்திரமன்றி பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாகப் பொருளாதார ரீதியில் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு உரிய நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒன்லைன் மூலமாக கற்றல் நடவடிக்கையின் செயற்திறன் தொடர்பில் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி சேவையின் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இயலுமை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது வாரத்தில் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெருமளவிற்குப் பாதிப்படைந்துள்ளன. இதன் அடுத்தடுத்த பரவல் அலை எப்போது தோற்றம் பெறும் என்று முன்கூட்டியே எதிர்வு கூற முடியாததன் காரணமாக, தொலைநோக்குப் பார்வையுடன் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை மறுசீரமைப்பது இன்றியமையாததாகும். 

எனவே இது குறித்து அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். ஊடகங்கள் வாயிலாக கற்றல்சார் நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கென பிரத்தியேக கல்வி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment