சட்ட விதிகளுக்கு புறம்பாக இடம்பெற்ற திருமண நிகழ்வு : 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

சட்ட விதிகளுக்கு புறம்பாக இடம்பெற்ற திருமண நிகழ்வு : 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

(செ.தேன்மொழி)

பாணந்துறை - கெசல்வத்த பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்வத்த பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பொலிஸார், சுகாதார பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன், அப்பகுதியில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது, குறித்த பகுதியிலிருந்த 8 பெண்கள் உட்பட 20 பேரை அவ்விடத்திலேயே தனிமைப்படுத்தி வைக்க சுற்றிவளைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் வேறு எவரேனும் அங்கு வந்து சென்றுள்ளார்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய இதன்போது, தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும், அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு சட்ட விதிகளுக்கு கீழும், தண்டனை சட்டக்கோவையின் சட்டவிதிகளுக்கு கீழும் வழக்கு தொடரப்படும்.

மேலும், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிறுபத்திற்கு புறம்பாக இவர்கள் செயற்பட்டுள்ளதால் அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் திருமண நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் பதிவு திருமணம் செய்ய முடியும். அதற்காக திருமண தம்பதியினர், திருமண பதிவாளர் உட்பட 15 பேர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கலந்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment