தற்போது கடலில் மூழ்கியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலைச் சுற்றி 5 படகுகள் : எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்கிறார் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

தற்போது கடலில் மூழ்கியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலைச் சுற்றி 5 படகுகள் : எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்கிறார் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா

(எம்.மனோசித்ரா)

தற்போது கடலில் மூழ்கியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலைச் சுற்றி 5 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறித்த 5 படகுகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகொன்றும், இந்திய கரையோர பாதுகாப்பு படகுகள் இரண்டும், துறைமுக அதிகார சபை உள்ளிட்டவற்றின் படகுகள் உள்ளடங்குகின்றன. இந்த 5 படகுகளும் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன என நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்று வியாழக்கிழமை எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது எனவும் குறித்த கடற்பகுதியில் எண்ணெய் படலம் காணப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செய்மதி தொழிநுட்பத்தின் ஊடாக பெறப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு எண்ணெய் கசிவு அவதானிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோன்று கப்பலிலுள்ள முழு எண்ணெய்யும் கசியும் பட்சத்தில் அது வரலாற்றில் பாரதூமானதொரு கடற்சூழல் மாசடைவிற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் பேர்ள் கப்பல் தீ விபத்து ஏற்பட்ட கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும், அதன்போது எண்ணெய் கசிவு அவதானிக்கப்படவில்லை என்று நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா மேலும் தெரிவிக்கையில், நேற்று நாம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கப்பலுக்கு அருகில் சிறியளவில் டீசல் கசிவினை மாத்திரமே அவதானிக்க முடிந்தது.

எனினும் இன்று காலை எண்ணெய் கசிவினை அவதானித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதனையடுத்து கடற்படைக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

தற்போது குறித்த கப்பலைச் சுற்றி 5 படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறித்த 5 படகுகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான படகொன்றும் , இந்திய கரையோர பாதுகாப்பு படகுகள் இரண்டும், துறைமுக அதிகாரசபை உள்ளிட்டவற்றின் படகுகள் உள்ளடங்குகின்றன. இந்த 5 படகுகளும் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.

No comments:

Post a Comment