கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நான்காவது தடவையாகவும் இன்று 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பயணத்தடை காலத்தில் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதற்காக அரசாங்கம் 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது இராஜாங்க அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அரசின் எந்த ஒரு நிவாரணத்திட்டத்தின் கீழாவது கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் குடும்பங்கள் தற்போது பெற்று வரும் கொடுப்பனவுகள் ஐயாயிரத்தை விட குறைவாக இருக்குமாயின் அவர்களுக்கு இந்த 5000 ரூபா தொகை வழங்கப்படும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு கொடுப்பனவு மட்டுமே உரித்தாகும். அதற்கிணங்க பிரதி மாதமும் 7ஆம் திகதி வழங்கப்படும் சமூர்த்தி கொடுப்பனவு சம்பந்தப்பட்ட நிலுவைத் தொகையுடன் இன்று முதல் பெற்றுக் கொடுக்கப்படும்.
இதற்கு முன்னர் 5000 ரூபா கொடுப்பனவு நாடு மூடப்பட்டிருந்த நிலையிலேயே வழங்கப்பட்டது எனினும் இம்முறை நாட்டில் பயணத் தடை மட்டுமே நடைமுறையில் உள்ள நிலையில் சிலருக்கு பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு யார் தகுதி உடையவர் என்பதை கிராமிய மட்ட குழுக்களே தீர்மானிக்கும். அவர்களுக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிராமிய குழுக்களின் பரிந்துரைக்கு அமைய குறித்த பிரதேச செயலாளரின் அனுமதியுடன் மேற்படி 5000 ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த முறை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் அனைத்து கொடுப்பனவுகளும் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ள நிலையில் இம்முறை நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சில தினங்கள் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment