கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குரிய 44 ஏக்கர் காணிகளை அபகரித்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் : உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார் ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 22, 2021

கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குரிய 44 ஏக்கர் காணிகளை அபகரித்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் : உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார் ரவிகரன்

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட்) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலிஅமைத்து ஆக்கிரமித்துள்ளது.

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 22.06.2021 கொக்கிளாய்ப் பகுதிக்கு நேரில் சென்று ஆராய்ந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய் கிழக்குப் பகுதியிலுள்ள எமது தமிழர்களுடைய பூர்வீக காணிகளை இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் அபகரித்துள்ளது.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினூடாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளிலும் கனியமணல் அகழ்வதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் கனிய மணல் அகழ்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அப்பகுதிளிலுள்ள தமிழ் மக்களால் எமக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

அதற்கு அமைவாக நான் மாகாண சபையில் இந்த விடயம் தொடர்பிலும் பேசியிருந்தேன். அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மாகாண சபையினால் ஓர் குழு அமைக்கப்பட்டது. அவ்வாறு மாகாண சபையினால் அமைக்கப்பட்ட குழுவினர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினைச் சார்ந்தோரைப் பல தடவைகள் சந்திததுக் கலந்துரையாடியுமிருந்தனர்.

குறிப்பாக கடந்த 2018.06.01 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்குரிய, இல்மனைட் தொழிற்சாலையில் கடந்த 2018.09.01 அன்றும் இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போதுகூட நாம் இந்த இடத்தை அபகரிக்கும் விடயத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இவை மக்களுடைய காணிகள், எனவே மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாம் கருத்துக்களைத் தெரிவித்து வந்த நிலையில் அவர்களுடைய இந்த ஆக்கிரமிப்பு மற்றும், கனிய மணல் அகழும் முன்னெடுப்புக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 2018.10.24 அன்று வட மாகாண சபையின் முதலாவது ஆட்சிக் காலம் நிறைவிற்கு வந்த பின்னர், இது தொடர்பான கூட்டங்களுக்கு வட மாகாண சபையால் அமைக்கப்பட்ட குழுவினை அழைப்பதுமில்லை, இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அந்தக் குழுவினருடன் கலந்துரையாடுவதுமில்லை.

இவ்வாறானதொரு சூழலில் இதுவரை காலமும் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்குரிய இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கான காணி அபகரிப்பு விடயம் மற்றும், கனிய மணல் அகழ்விற்கான செயற்பாடுகள் என்பன தற்போது மீண்டும் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கென 18 தமிழ் மக்களுக்குச் சொந்தமான, 44 ஏக்கர் அறுதி உறுதிக் காணிகளை கொக்கிளாய் கிழக்குப் பகுதியில், காணிகளுக்குரிய தமிழ் மக்களின் அனுமதியைப் பெறாது கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் வேலிகளை அமைத்து அபகரித்து தமது அடாவடித் தனமான செயற்பாட்டினைச் செய்துள்ளனர். கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்தோடு அண்மையில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது அமைப்புகள், பொதுமக்கள் எனப் பலரும் கையொப்பமிட்டு, இந்த காணி அபகரிப்பைத் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், இந்தக் காணிகள் காணிகளுக்குரிய எமது தமிழ் மக்களுக்கே சேர வேண்டும் என்பதான மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வழங்கியதுடன், இன்னும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் அந்த மகஜரின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், என்னிடமும் அந்த மகஜரின் பிரதியினை அப்பகுதி மக்கள் கையளித்திருந்தனர்.

இவ்வாறாக அந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோர், அப்பகுதியில் அபகரிக்கப்பட்டுள்ள இந்தக் காணிகள், காணிகளுக்குரிய மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென கோரியிருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்குரிய இந்த அறுதி உறுதிக் காணிகளை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் எவ்வாறு ஆக்கிரமிக்க முடியும்?

இவ்வாறு மக்களுக்குரிய காணிகளை அனுமதியின்றி அரச திணைக்களங்களும், கூட்டுத்தாபனங்களும் அபகரிப்பது பொருத்தமான செயற்பாடல்ல.

எனவே கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் தாம் அபகரித்துள்ள இந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

அவ்வாறாக இந்தக் காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment