இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்துடன் மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையிலேயே முதலில் ஆரம்பமாகியுள்ள டி-20 தொடரின் முதல் போட்டி கார்டிஃப், சோபியா கார்டீன்ஸ் மைதனாத்தில் இலங்கை நேரப்படி இரவு 11.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் அந்நாட்டு நிலைமைகளின் கீழ் விளையாடுவது இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏனெனில் ஈயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்து வருகிறது.

சில மாதங்களில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி டி-20 உலகக் கிண்ணத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள தமது வீரர்களின் திறமை குறித்து இங்கிலாந்து இந்தப் போட்டியில் கவனம் செலுத்தும்.

ஜோஸ் பட்லர் மற்றும் ஜோனி பெர்ஸ்டோவ் போன்றவர்கள் இங்கிலாந்துக்கு முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் இலங்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு காலத்தில் ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை தற்சமயம் 8 ஆவது இடத்தில் உள்ளது.

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இங்கிலாந்து 16 டி-20 சர்வதேச போட்டிகளில் வென்றுள்ளதுடன், எட்டு ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது.

அதே காலகட்டத்தில் இலங்கை வெறும் ஐந்து டி-20 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 14 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

ஐ.சி.சி. டி-20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கன் வெற்றிகரமான தலைவராக கடந்த 2015 முதல் இருந்து வருகிறார்.

அதேசமயம் 2014 ஆம் ஆண்டில் இலங்கை டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற போதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் நிலை மோசமாகவுள்ளது.

லசித் மலிங்க, அஞ்சலோ மெத்யூஸ், உபுல் தரங்கா, திசாரா பெரேரா ஆகிய சிரேஷ்ட வீரர்களில் எவரும் தற்சமயம் இல்லாத நிலையில் இங்கிலாந்தை அவர்களது சொந்த கோட்டையில் எதிர்கொள்ளவுள்ளது இலங்கை.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணியில் துஷ்மந்த சமீரா, நுவான் பிரதீப் உள்ளிட்ட ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்த இருவரையும் தவிர, இசுரு உதனா, அசிதா பெர்னாண்டோ, பினுரா பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணியின் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களின் முதல் தேர்வாக வனிந்து ஹசரங்காவும், அகில தனஞ்சயா, லக்ஷன் சந்தகன், பிரவீன் ஜெயவிக்ராமா ஆகியோரும் இலங்கை அணியில் உள்ளனர்.

மேலும் தசுன் ஷானகா, சாமிகா கருணாரத்ன, தனஞ்சய லக்ஷான், இஷான் ஜெயரத்னே ஆகியோர் அணியை சமநிலைப்படுத்த சகலதுறை ஆட்டக்காரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்றைய ஆட்டம் குறித்து இலங்கை அணித் தலைவர் குசல் பெரேரா கூறுகையில், நாங்கள் களத்தில் தைரியமாக விளையாடினால், வெற்றிகரமான முடிவுகளை அடைய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க இங்கிலாந்து அணியில் பல முக்கிய வீரர்கள் இல்லாதது இலங்கைக்கு ஒரு அதிர்ஷ்டத்தை அளித்துள்ளது.

குறிப்பாக சகலதுறை ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரே ஆர்ச்சர் ஆகியோர் உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

No comments:

Post a Comment