2020 A/L பரீட்சை மீள் திருத்த விண்ணப்பம் ஜூலை 10 வரை ஏற்பு : ஒன்லைனில் மாத்திரம் விண்ணப்பிக்கவும் : சந்தேகங்கள், தகவல்கள் அவசியமாயின் தொடர்பு கொள்ளலாம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

2020 A/L பரீட்சை மீள் திருத்த விண்ணப்பம் ஜூலை 10 வரை ஏற்பு : ஒன்லைனில் மாத்திரம் விண்ணப்பிக்கவும் : சந்தேகங்கள், தகவல்கள் அவசியமாயின் தொடர்பு கொள்ளலாம்

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஜூலை 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பீ. சனத் பூஜித இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் கடந்த வருடம் ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை இடம்பெற்றது.

கடந்த மே 04ஆம் திகதி வெளியிடப்பட்ட இப்பெறுபேறுகள் தொடர்பில், மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை, ஒன்லைன் மூலம் மாத்திரம் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மாதிரி விண்ணப்பம், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் 'எமது சேவை' எனும் பகுதியில் 'பாடசாலை பரீட்சைகள்' என்பதை கிளிக் செய்வதன் மூலம் குறித்த விண்ணப்பத்தை பெற்று முழுமைப்படுத்தி அனுப்பி வைக்கலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் கையடக்கத் தொலைபேசி செயலியான 'DoE' ஊடாகவும் இதனை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான அனைத்து ஆலோசனைகளையும், onlineexams.gove.lk/eic எனும் இணைய முகவரிக்குச் சென்று, அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (இதன்போது பரீட்சார்த்தி தமது ஆளடையாள அட்டையை உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது)

இதற்காக பாடமொன்றுக்கு கட்டணமாக ரூ. 250 அறவிடப்படும் என்பதோடு, அதனை வங்கிக் கடனட்டை அல்லது வரவு அட்டை மூலம் அல்லது தபால் அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்திய பின்னர், அது தொடர்பான சிட்டையை PDF வடிவில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் வழங்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு SMS தகவலும் அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வு செய்ய வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட சரியான தகவல்களை முழுமைப்படுத்துவது விண்ணப்பதாரிகளின் பொறுப்பு என்பதோடு, உரிய கட்டணத்தை செலுத்தாத விண்ணப்பங்கள், எவ்வித முன்னறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும். விண்ணப்பத்திற்காக செலுத்தப்படும் கட்டணங்கள் எதுவும் மீளளிக்கப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட இலக்கம் 12, பொது சாதாரண பரீட்சையில் 30 இற்கும் குறைவான புள்ளிகளைப் பெற்றதன் காரணமாக, பல்கலைக்கழக நுழைவு தகுதியை இழந்த விண்ணப்பதாரிகளும், அப்பாடத்திற்காக மீள் திருத்த விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலை காரணமாக, இம்முறை பாடசாலை விண்ணப்பதாரிகளிள் விண்ணப்பங்களில், பாடசாலை அதிபர்களின் பரிந்துரை அல்லது கையொப்பம் அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.

பாடசாலை பரீட்சைகள் பிரிவு
0112785231/ 0112785216
0112784037
உடனடி தொலைபேசி இலக்கம் - 1911

No comments:

Post a Comment