12.5 கிலோ சிலிண்டர்கள் அனைத்து எரிவாயு விற்பனை நிலையங்களிலும் இருக்க வேண்டியது கட்டாயம், விலை ஒரு சதத்தால்கூட அதிகரிக்கப்படமாட்டாது என்கிறார் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

12.5 கிலோ சிலிண்டர்கள் அனைத்து எரிவாயு விற்பனை நிலையங்களிலும் இருக்க வேண்டியது கட்டாயம், விலை ஒரு சதத்தால்கூட அதிகரிக்கப்படமாட்டாது என்கிறார் அமைச்சர் பந்துல

எரிவாயுவின் விலை ஒரு சதத்தால்கூட அதிகரிக்கப்படமாட்டாது. 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் அனைத்து எரிவாயு விற்பனை நிலையங்களிலும் இருக்க வேண்டுமென்பதுமே அரசாங்கத்தின் தீர்மானமாகுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எரிவாயு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியை பின்பற்றாத வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

எரிவாயுவின் விலை, நிறை குறைப்பு மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், புதிய எரிவாயுவை (12.5 கிலோ நிறை) சந்தைக்கு அறிமுகம் செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஒருபோதும் அனுமதியளிக்கவில்லை. என்றாலும் அந்த நிறுவனத்திற்கு புதிய வகையான எரிவாயு ஒன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு நிறுவனமாக அவர்கள் செயற்பட்டு புத்தாக்கமான ஒரு எரிவாயுவைதான் அவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.

ஆனால், இந்த விடயத்தில் அநுரகுமார திஸாநாயக்க கூறுவது போன்று நடந்துள்ள அநீதிகளை ஏற்றுக் கொள்கிறேன்.

இதன் மூலம் நுகர்வோரை ஏமாற்றியுள்ளனர். எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இந்த புதிய அறிமுகம் தொடர்பில் ஆய்வொன்றை நடத்தியுள்ளார். இதனை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

12.5 எரிவாயுக்கு சந்தையில் தட்டுப்பாடு உள்ளதென்பதை நாம் நடத்திய ஆய்வில் ஏற்றுக் கொள்கிறோம். அதிவிசேட வர்த்தமானி ஊடாக அனைத்து எரிவாயு நிரப்பும் நிலையங்களிலும் 12.5 கிலோ எரிவாயு இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

இந்த விதிமுறைகளுக்கு எதிராக செயற்படும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறியுள்ளோம். லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கொன்றும் மாலிகாகந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment