கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியும் அவர் ஸ்தாபித்த செயலணிகளும் தோல்விகளையே கண்டுள்ளன - இனியேனும் மஹிந்த, மைத்திரியை உள்ளடக்கிய மாற்று அரசியல் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் : அநுரகுமார திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 12, 2021

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியும் அவர் ஸ்தாபித்த செயலணிகளும் தோல்விகளையே கண்டுள்ளன - இனியேனும் மஹிந்த, மைத்திரியை உள்ளடக்கிய மாற்று அரசியல் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் : அநுரகுமார திஸாநாயக்க

(எம்.மனோசித்ரா)

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியும் அவர் ஸ்தாபித்த செயலணிகளும் தோல்விகளையே கண்டுள்ளன. இவர்களின் இயலாமையின் வெளிப்பாட்டையே தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் வெளிப்படுத்துகின்றன. எனவே இனியேனும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பங்காளிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளடக்கியவர்களை இணைத்து மாற்று அரசியல் பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனை வலியுறுத்தினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொவிட் தொற்றின் காரணமாக பதிவாகும் ஒவ்வொரு உயிரிழப்புக்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான நிர்வாகமும் பொறுப்புக்கூற வேண்டும். 

பிறந்து சில மாதங்களேயான குழந்தைகளும், பிறக்கும் முன்னரே தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைகளும் உயிரிழப்பதென்பது சாதாரணமானதொரு விடயமல்ல. இந்த அரசாங்கத்திற்கு இது ஒரு இலக்கம் மாத்திரமேயாகும். ஆனால் இது மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டிய விடயமாகும். உயிரிழப்பவர்கள் மீது ஆட்சியாளர்கள் கரிசணை செலுத்த வேண்டும். குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமே இதனை வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் பதிவாகின்ற மரணங்களை இந்தியாவுடன் ஒப்பிட்டு, அந்நாட்டில் நாளாந்தம் 3000 மரணங்கள் பதிவாகின்றன. ஆனால் இலங்கையில் 20 மரணங்களே பதிவாகின்றன என்று கூறுவது முட்டாள்தனமாகும்.

உயிரிழப்புக்கள் என்பது வெறுமனே இழப்புக்கள் அல்ல. அந்த உயிர்களை இழந்த உறவுகளே தற்போது அதன் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் எதிர்கட்சியை இணைத்துக் கொள்ளாவிட்டாலும், அரசாங்கத்திற்குள் உள்ள துறைசார்ந்தவர்களை உள்ளடக்கியேனும் புதிய அரசியல் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்க வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தற்போது அரசாங்கத்திலுள்ளனர். அரசியலில் அனுபவம் மிக்க அவர்கள் தலைமையில் குறித்த அரசியல் பொறிமுறையை ஸ்தாபித்து அதற்குள் ஏனையோர் உள்ளடக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம். தற்போது அமைக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு குழு முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்.

மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் சிறந்ததாகும். எனினும் இந்த தீர்மானம் ஒரு மாதத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மிகவும் கால தாமதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை கைமீறி சென்றுள்ளமையினால் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க வேண்டும். கொவிட் கட்டுப்படுத்தலில் தனித்தனியாக செயற்படுவதை விடுத்து அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இப்போது கொவிட் தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதை விட , கொவிட் அற்ற சூழலை உருவாக்கி அதில் வாழ வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். கடுமையான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது , பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதற்கான பிரத்தியேக நிதியமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

மனித உயிர்களையும் பொருளாதாரத்தையும் ஒரே மட்டத்தில் நோக்க முடியாது. எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய அரசியல் பிரவேசம் நிச்சயம் தேவை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பிரஜைகள் ஒவ்வொருவரும் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இன்று கோட்டாபய ராஜபக்ஷ நேரடியாக அதனைக் கூறவில்லை. ஆனால் அதே போக்கில் தான்செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தி மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எவ்வகையான தீர்மானங்களை எடுத்தாலும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜே.வி.பி. தயாராகவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment