(செ.தேன்மொழி)
மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது அத்தியாவசிய தேவையின்றி போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இதன்போது பொலிஸார், முப்படையினர், சுகாதார பிரிவினர், ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் மற்றும் அரச துறையில் அத்தியாவசிய சேவை பிரிவில் பணிப்புரிபவர்கள் தங்களது தொழில் அல்லது அலுவலக அடையாள அட்டையை காண்பித்து பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (நேற்று) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளன.
இந்நிலையில் இந்த சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக, அனைத்து மாகாணங்களின் எல்லை பகுதிகளிலும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமையவே சுற்றிவளைப்புகள் இடம்பெறவுள்ளன. இந்த சுற்றிவளைப்பானது இம்மாதம் இறுதிவரையிலும் செயற்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவையின் நிமித்தம் மாத்திரமே மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடமுடியும். அவ்வாறான நபர்கள் தங்களது தொழில் அடையாள அட்டை அல்லது அலுவலக அடையாள அட்டையை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்.
அதற்கமைய பொலிஸார், முப்படையினர், சுகாதார பிரிவினர், ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் மற்றும் அரச துறையில் அத்தியாவசிய சேவை பிரிவில் பணிபுரிபவர்கள் இவ்வாறு போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட முடியும்.
இந்நிலையில், எவரேனும் சட்டவிரோதமான முறையில், துணை வீதிகளை பயன்படுத்தி மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:
Post a Comment