(செ.தேன்மொழி)
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வைத்திய நிபுணர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனைய துறையினரால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்று தீவிரமடைந்து தொற்றாளர்கள் பெருமளவானோர் உயிரிழப்பதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
தற்போது சுகாதாரத்துறை தொடர்பில் மூன்று இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவர் எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்துவதை மாத்திரமே செய்துவருகின்றார். இவ்வாறு செயற்படுவதால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது. இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன.
வெவ்வேறு நாடுகளில் இனங்காணப்பட்ட 6 வகையான வைரஸ்கள் இலங்கையிலும் பரவியுள்ளன. விமான நிலையங்களில் முறையான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது.
தற்போது தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பினை வைத்திய நிபுணர்களிடமே கையளித்திருக்க வேண்டும். ஏனைய துறையினரால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.
நாட்டில் சுமார் 800 இற்கும் அதிகமானோர் கொவிட் தொற்றாள் உயிரிழந்துள்ளனர். நிலைமையில் பாரத்தூரத்தன்மையை உணர்ந்து அரசாங்கம் இப்போதாவது சர்வ கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்.
தடுப்பூசிகளை துரிதமாக கொள்வனவு செய்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தன்னிச்சையாக செயற்பட்டதன் காரணமாகவே இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment