போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அவதானம் என்கிறார் அமைச்சர் கெஹெலிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அவதானம் என்கிறார் அமைச்சர் கெஹெலிய

(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நாளாந்தம் சுகாதார தரப்பினர் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கமைய குறிப்பிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் காணப்படுவது சாதாரண சூழல்நிலை அல்ல. அசாதாரண சூழலே நிலவுகிறது. நிலைமைகள் நாளுக்குநாள் மாற்றமடைகின்றன. எனவே அவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் போது ஓரிரு நாட்கள் கால தாமதம் ஏற்படக்கூடும்.

நாளாந்தம் மாற்றமடைந்து செல்கின்ற சூழலில் அதற்கேற்றால்போல் தினந்தோறும் தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் இது சிக்கலுக்குரிய விடயமாகும்.

கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் தினமும் சுகாதார தரப்பினர், கொவிட் தடுப்பு செயலணியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் போது குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே உரிய நேரத்தில் அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும். எவ்வாறிருப்பினும் அபாயத்தை உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment