தற்போது மக்கள் இறப்பதை பார்க்கும்போது எமது மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தமையே நினைவுக்கு வருகிறது - சிறிதரன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 5, 2021

தற்போது மக்கள் இறப்பதை பார்க்கும்போது எமது மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தமையே நினைவுக்கு வருகிறது - சிறிதரன் எம்.பி.

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்-19 வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு போகின்ற நிலையில் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்கள் மோசமானதாக அமையும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

தற்போது மக்கள் இறப்பதை பார்க்கும்போது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எமது மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தமையே நினைவுக்கு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், கொவிட் என்பது ஒரு பயங்கரவாதம் அல்ல, கொவிட்-19 என்பது ஒரு கொள்ளை நோய், இதனை எதிர்கொள்ளும் வழிமுறை என்ன என்பது கண்டறிய வேண்டியதே முக்கியமானதாகும். அதை விடுத்து ஒரு இனத்தின் போராட்டத்தை பயங்கரவாதமாக காண்பிக்க முனைவது ஐக்கியத்திற்கான வழிமுறை அல்ல. 

கொவிட் வைரஸ் தாக்கத்தில் பல்வேறு மக்கள் இறந்து போயுள்ளனர். இந்த இறப்புகள் குறித்து உண்மைகள் வெளிவருவதில்லை. இலங்கையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் விதம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், வடக்கு கிழக்கில் இதன் நிலைமைகள் மாறாகவே உள்ளன. 

இலங்கையில் முதல் முதலில் வடக்கு கிழக்கில் கொவிட் தனிமைப்படுத்தல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இராணுவத்தின் வசமே இவை அனைத்தும் உள்ளன. ஆனால் இந்த நிலையங்களில் நோயாளர்களின் நிலைமை மோசமானதாக உள்ளது. மூன்று வேலை சோறும் கருவாட்டுத்துண்டும் வழங்கப்படுகின்றது. எனவே இதனை சபை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது எல்லா இறப்புகளையும் கொவிட் எனக்கூறுகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முதல் திரும்பிப்பார்த்தல் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டு வவுனியா செட்டிக்குளம் மெனிக்பார்ம் உள்ளிட்ட சில முகாம்களில் இருத்தப்பட்ட பலர் கொத்துக்கொத்தாக விழுந்து விழுந்து மரணித்தார்கள். 

அந்த நேரத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாது எரிக்கப்பட்டன. பல உடல்கள் தாக்கப்பட்டன. இவ்வாறான மோசமான நிலை அன்று இருந்தது, இப்போதும் மக்கள் அவ்வாறு இறக்கின்றனர். இதனை பார்க்கும்போது அந்த நேர அவல நிலையே எமக்கு நினைவுக்கு வருகின்றது. 

ஒரு நாளைக்கு இரண்டாயிரம் அடையாளபடுத்தக்கூடிய அளவிற்கும் கொவிட் வைரஸ் இந்த நாட்டில் தொற்றுகின்றது என்றால் இன்னும் எவ்வளவு தூரம் இதன் தாக்கம் ஏற்படப்போகின்றது என்ற அச்சம் உள்ளது. கொவிட் தடுப்பூசி ஏற்றல் கூட கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment