நாட்டில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை வெற்றி கொள்ள அரசாங்கம் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் கோரியுள்ளது. கொவிட் வைரஸ் தாக்கத்தை கொண்டு எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயல்கின்றனர் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமாகும்.
இதற்கமையவே மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தின் ஊடாக பல தீர்மானங்களை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றி கொள்ள அரசாங்கம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைகளையும் கோரியுள்ளது.
கொவிட் வைரஸ் தாக்கத்தை கொண்டு அதனூடாக அரசியல் இலாபமடைய எதிர்க்கட்சியினர் முயற்சிக்கிறார்கள். நெருக்கடியான நிலையில் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை வெறுக்கத்தக்கது என்றார்.

No comments:
Post a Comment