'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் இரண்டாக பிளவுபட்டு சிதறும் அனர்த்தம் இல்லை - இந்தியா, கட்டார் நாடுகள் அனுமதி மறுத்ததாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது : இலங்கை அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பல் இரண்டாக பிளவுபட்டு சிதறும் அனர்த்தம் இல்லை - இந்தியா, கட்டார் நாடுகள் அனுமதி மறுத்ததாக வெளியிடப்பட்ட தகவல் உண்மைக்குப் புறம்பானது : இலங்கை அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீ பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு, இந்தியா மற்றும் கட்டார் நாடுகளின் இரண்டு துறைமுகங்களிலும் பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்ட பின்னரே, இங்கு வந்ததாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) விசேட செய்தியாளர் மாகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த கப்பல் இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் துறைமுகங்களில் சில கொள்கலன்களை இறக்கிய பின்னரே இங்கு வந்ததாக தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட நிபுணர் தீப்த்த அமரதுங்க, திக்ஓவிட்ட முதல் நீர்கொழும்பு வரையான கடல் பிராந்தியத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் தென் கடல் பிராந்தியங்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இக்கப்பலில் இருந்த நைட்றிக் அமிலத்தின் சில பகுதிகள் தீயில் எரிந்து வளிமண்டலத்திற்கும், சில பகுதிகள் நீரிலும் கலந்திருக்கக்கூடும். இதன்போது குறித்த கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் வெளியேறும். ஆனால் பெரிய மீன்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. சிறிய மீன்கள் வேகமாக நீந்திச் செல்ல முடியாததால் இறக்கலாம். 

எனினும், மீன்களை உட்கொள்வது தொடர்பில் தற்போது எவரும் அச்சமடையத் தேவையில்லை. ஏனெனில் குறித்த பகுதியானது தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. இதனால் பலநாள் படகுகள் மூலம் தொலைதூர கடலில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களே தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. 

தற்போது இந்த கடல் பிராந்தியத்தில் இருந்து சந்தைக்கு மீன்கள் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இந்த கப்பல் இரண்டாக பிளவுபட்டு சிதறும் அனர்த்தம் இல்லை என்று இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட கடற்படை தளபதி கூறினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதையடுத்து இலங்கை சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை முழமையாக மதிப்பீடு செய்யும் வரையில் துரித செயற்பாடாக உடனடி இழப்பீட்டு தொகையை அறவிடுவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்தியாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்த போதிலும் மீன் உள்ளிட்ட கடலுணவை உட்கொள்வதில் எந்தவித அச்சத்தையும் பொதுமக்கள் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஒரு நாள் மீன்பிடி வள்ளங்களின் நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த பிரதேசங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment