கொழும்பு துறைமுக நகர அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு : நீதி அமைச்சுக்கும் எடுத்துரைக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

கொழும்பு துறைமுக நகர அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு : நீதி அமைச்சுக்கும் எடுத்துரைக்க தீர்மானம்

(ஆர்.ராம்)

கொழும்பு துறைமுக நகரில் காணப்பட்ட அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதேபோன்று சட்டமா அதிபர் திணைக்கள இலத்திரணியல் பலகையில் காணப்பட்ட தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் நீதி அமைச்சுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி கலன்சூரிய தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரில் காணப்பட்ட அறிவித்தல் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆணைக்குழு கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. 

அதனடிப்படையில் கொழும்புத் துறைமுக நகரினை நிருவாகம் செய்யும் நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக துப்பரவேற்பாட்டு இராஜாங்க அமைச்சின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், எதிர்காலத்தில் இவ்விதமான நிலைமைகளை மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்தமாறும் கோரியுள்ளோம். 

அதேநேரம், சட்டமா அதிபர் திணைக்கள இலத்திரணியல் பெயர் பலகை விவகாரமும் கவனத்தில் கொண்டுள்ள நாம், அதுபற்றி நீதியமைச்சுடன் விரைவில் நேரடியாக கலந்துரையாடி எடுத்துரைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவானது, அரச கரும மொழி மற்றும் மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் உள்ள தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment