குருந்தூரில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் விழா எடுக்கும்போது கண்டுங்காணாமல் இருந்த போலீசாருக்கு, முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? - ரவிகரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

குருந்தூரில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் விழா எடுக்கும்போது கண்டுங்காணாமல் இருந்த போலீசாருக்கு, முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? - ரவிகரன்

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புபகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் பௌத்த விழா எடுக்கும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முல்லைத்தீவு போலீசாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதுள்ள கொரோனாத் தொற்று அசாதாரண நிலையினைக் காரணங்காட்டி, முல்லைத்தீவு போலீசார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினூடாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தடைக்கட்டளைகளைப் பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக் கொண்ட தடைக்கட்டளையினை 15.05.2021 நேற்று முல்லைத்தீவு போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளித்திருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி 15.05.2021 இன்று காலை 10.30 மணியளவில் எனது இல்லத்திற்கு வருகைதந்து, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட நீதிமன்றக் கட்டளையினை என்னிடம் தந்துள்ளார்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலோ அல்லது முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலோ எந்தவித கூட்டங்களோ அல்லது நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவோ கூடாதென, அந்தத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை வழக்கு இலக்கம் AR/418/ 21 என்னும் இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், கொரோனாக் காலத்தில் இவ்வாறான கூட்டங்கள் அல்லது நினைவேந்தல்கள் செய்வது பிழையானது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் நீதவான் நீதமன்றம் வழங்கியுள்ள கட்டளையை நாம் ஏற்கின்றோம். அதனை நாம் மதிக்கின்றோம்.

இதேவேளை இதே முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தூர் மலையில், கடந்த 10.05.2021 அன்று சிங்கள பௌத்த துறவிகள், தொல்லியல் துறையினர், இராணுவத்தினர் என பலரும் ஒன்றுகூடி, அங்கு பாரிய அளவில் பௌத்த விழா ஒன்றினை சுகாதார நடைமுறைகளை மீறி முன்னெடுத்திருந்தனர். இதனைக் கண்டுங்காணாதவர்களாக முல்லைத்தீவுப் போலீசார் இருந்தனர்.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளும்போது, அவர்கள் இந்த நாட்டில் தாம் அக்கறை உடையவர்கள் என காண்பிக்கும் வகையில் இவ்வாறான நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்களைச் செய்கின்றனர்.

எனவே இந்த நினைவேந்தல் விடையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும்போது, முல்லைத்தீவுப் போலீசாரிற்கு இருந்த நாட்டின் மீதான அக்கறை, குருந்தூர் மலையில் சுகாதார நடவடிக்கைளை மீறி சிங்கள பௌத்த விழாக்கள் இடம்பெறும்போது ஏன் இல்லாமல்போனது.

முல்லைத்தீவு போலீசார் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் செயற்படுகின்றனர் என்பதையே இது உணர்த்துகின்றது - என்றார்.

No comments:

Post a Comment