வார்த்தெடுக்கப்பட்ட திராவிட வாரிசு; பி.ஜே.பி ஆசைகள் அஸ்தமனம்! - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

வார்த்தெடுக்கப்பட்ட திராவிட வாரிசு; பி.ஜே.பி ஆசைகள் அஸ்தமனம்!

சுஐப் எம்.காசிம்

இந்திய அரசியலில் மாநில அரசுகள் பேசப்படுவதுதான் அதிகம். அந்தளவுக்கு இவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நிதி, நீதி விவகாரங்கள் தவிர அனைத்திலும் மாநிலங்களின் மன நிலைகளைப் பொறுத்துத்தான் அரசியலும், ஆட்சியும் நகருகிறது. இருந்தாலும் உள்ளூர் காவல்துறை மாநில அரசுக்குள் இயங்குவதும், தேவை ஏற்படின் வெளிநாடுகளில் வரவுள்ள நிதிகளைப் பெற்றுத்தருமாறு மத்திய அரசாங்கத்தைக் கோரும் தைரியங்களும் இந்த மாநிலங்களிடம் இருக்கின்றன. 

இத்தனையும் ஒட்டுமொத்த வாய்ப்பாக இருக்க வேண்டுமானால், மத்திய அரசின் பங்காளியாக இருந்துவிட்டால் போதும். இப்போது நடந்து முடிந்துள்ள ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளில் நான்கு, மத்திய அரசாங்கத்தின் எதிரிகள் வசம் வந்துள்ளதுதான், இந்திய அரசியலைப் பரபரப்பாக்கியுள்ளது.

தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி ஆகியவை மத்திய அரசாங்கத்தின் பிடியிலில்லை. இது, ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் காலூன்ற விழையும் கோட்பாட்டிலுள்ள மத்திய அரசுக்குப் (பாரதீய ஜனதாக் கட்சி) பிடிக்காதுதான். என்ன செய்வது! மக்களது ஆணை இப்படியான ஆசையில் மண்தூவிவிட்டதே! இந்தக் காலூன்றும் ஆசையை, இந்திய காங்கிரஸ் தலைமையிலான முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியின் பிரதான பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் மொழித் திணிப்பாகவும், மத ஒடுக்கு முறையாகவும்தான் பிரச்சாரங்களில் முதன்மைப்படுத்தியது. 

தமிழகக் கோயில்களில் ஹிந்தி மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டனர் தமிழர்கள். ஒரு காலத்தில் கலைஞருடைய காலகட்டத்திலும் இவ்வாறான நிர்ப்பந்தங்கள் எழுந்தபோது, ”தமிழில்தான் அர்ச்சனை செய்வோம், தமிழ் தெரியாத கடவுள்கள் தமிழ்நாட்டில் இருக்கத் தேவையில்லை” என்றார். இந்தத் தத்துவங்களை அவரது மகனான புதிய முதல்வர் ஸ்டாலினும் வேறு வடிவத்தில் வாக்காளர்களுக்கு விளக்கியிருந்தார்.

இதற்காகத்தான் இத்தனை வெற்றி என்றும் கூறுமளவுக்கு நிலைமைகள் இல்லை. ஏனெனில், சுமார் 15 கோடி ரூபா செலவிட முடியுமானவர்களே, தி.மு.கவில் வேட்பாளராக வரமுடியுமென்ற கட்சியின் நிபந்தனைகளில் தெரிகிறதே வெற்றியின் இலட்சணம். ஏதோ மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 174 இல் போட்டியிட்டு 125 இல் தனித்து வென்றிருக்கிறது தி.மு.க. இதிலுள்ள ஸ்டாலினின் ஏனைய சாதனைகளாக, தமிழக முதலமைச்சர்களின் புதல்வரென எவரும் இதற்கு முன்னர் முதலமைச்சராக வந்திராதமை, மட்டுமல்ல முன்னாள் முதல்வர்களான கலைஞர், ஜெயலலிதாவுக்குப் பின்னர், நேரடியாக மக்களால் தெரிவானமை என்பனவும் பார்க்கப்படுகின்றன. மற்றும் 25 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய காங்கிரஸ் 18 இல் வெற்றியை சாதனைகளாக்கியுள்ளது. 

ஒட்டுமொத்தமாக இந்தக் கூட்டணிக்கு 159 ஆசனங்கள் கிடைத்ததில் உள்ளூரக் குதூகலிக்கிறது இந்திய காங்கிரஸ். தமிழகத்திலுள்ள 39 எம்.பிக்களில் 38 ஐ வென்று தந்த தி.மு.க, மாநில அதிகாரத்தில் அமர்வது, பாராளுமன்றத்தில் இந்திய காங்கிரஸுக்குப் பலமில்லாமலா போகும்? பிராந்தியப் பலங்களைத் தகர்ப்பதில்தான், மத்தியில் நிலைப்படும் மரபு இந்திய அரசியலில் இருக்கிறதே!. இதற்காகத்தான், பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தப் பிராந்தியங்களின் பலங்களைத் தகர்த்தெறிய பகீரதப் பிரயத்தனம் செய்தது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிக முனைப்புடன் நின்ற மத்திய அரசு மண்வாரிக் கொண்டது. தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை புதிய கட்சி ஆரம்பிக்க விடாமல் தடுத்ததும் இதற்காகத்தானே. இதிலும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்துவதற்கு எத்தனித்த மத்திய அரசின் அத்தனை சக்திகளும், ஒரு தாய்ப்பாசத்துக்கு முன்னால் தவிடுபொடியாயிற்று. 294 தொகுதிகளில் 216 ஐ வென்றதால், மூன்றாவது முறையாகவும் மம்தா பெனார்ஜி முதலமைச்சராகியுள்ளார். 

மத்தியிலுள்ள பிரதான எதிர்க்கட்சியான இந்திய காங்கிரஸையும் இந்த மாநிலத்தில் மறந்த பா.ஜ.க, எப்படியாவது திரிணாமுல் காங்கிரஸுக்கு தீவைக்க முனைந்து, தன்னைத் தற்கொலைக்குள் திணித்துக்கொண்ட செய்தி, பிரதமர் மோடியின் மவுசில் மண்ணைப் போட்டிருக்கலாம். ஏனெனில், சுதந்திரமாக விடப்பட்டுள்ள பிராந்திய அரசுகளின் ஒத்துழைப்புக்களின்றி மத்திய அரசில் பணியாற்றுவது பார்வைக்கு அழகாகத் தென்படினும் ஆட்சிக்கு அழகாக இருக்காதுதானே. இதனால்தான், இந்த முடிவுகள் இந்திய அரசிலைப் பரபரப்படுத்தியுள்ளது. இதேபோன்றுதான், கேரளா மற்றும் புதுச்சேரி செய்திகளும் உள்ளன.

மீண்டும் நாம் தமிழகம் பக்கம் வந்து பார்க்கவேண்டிய பார்வைகள் பலவுள்ளன. 179 தொகுதிகளில் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 65 இலும், 23 தொகுதிகளில் களமிறங்கிய இதன் பங்காளியான பாரதீய ஜனதாக் கட்சி 04 இலும் வென்று என்ன செய்தியைச் சொல்கின்றன? கலைஞருடைய அல்லது காந்தியுடைய குடும்ப வாரிசுகளை ஒழிக்க முடிந்ததா? தேசியவாதம் என்ற போர்வைக்குள் மறைந்திருந்த மதவாதத்தை வாழவைக்க இயன்றதா? அல்லது அம்மா புகழை (ஜெயலலிதா) அரியணையேற்றக் கிடைத்ததா? இல்லை. ஏன் தனியாக அம்மா புகழையே பேசிக் கொண்டிருந்த அம்மா முன்னேற்றக் கழகத்தின் தலைவரான டி.டி.வி.தினகரனுக்காவது வெல்லக் கிடைத்ததா? இத்தனைக்கும் காரணம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கு வாரிசுகள் இல்லாதது அல்லது வாரிசுகளை அவர்கள் வெளிப்படுத்தாததுமே.

ஈழத்துத் தமிழரைக் கூறி பிழைப்பு நடத்தும் அரசியலின் வீழ்ச்சி, புலிகள் செய்த 1991 தவறுக்குப் பின்னர் ஆரம்பமாகத் தொடங்கிய துயரத்தை நாம் மறக்க முடியாது. இந்தப் பிடிக்குள் இந்தியாவின் பிராந்திய அரசியலிலியங்கும் யதார்த்தங்களையும் நமது தலைவர்கள் உணராதிருக்கவும் இயலாது. சீமான் ஆறு வீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் அணியாகவும், இதே அளவிலிறங்கி கமல்ஹாஸன் எட்டாவது இடம் சென்றுள்ளதையும் வருங்கால வளர்ச்சிக்கான பாதைகள் எனச் சிலர் வர்ணிக்கலாம். அவ்வாறானால், விஜேகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஒரு முறை 28 ஆசனங்களை வென்று, இப்போது சென்றுள்ள நிலைமையை என்வென்று சொல்வது?

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை கலைஞரின் தி.மு.க மற்றும் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க என்பனதான் நிலையான அத்திவாரங்கள். அடுத்ததெல்லாம் ஆழமறியாது காலைவிட்ட கூட்டங்கள்தான். எனினும், எதிரிகளை வீழ்த்தும் தொனியில் மத்திய அரசு இயங்காமலா இருக்கும்? சொத்துக் குவிப்பு, காட்டிக் கொடுத்தல் மற்றும் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்களில் இந்த மாநிலங்கள் மாட்டாதிருந்தால்தான் இவர்களுக்கு ஆயுளும் கெட்டி, ஆட்சியும் கிட்டி. கலைஞரின் வாரிசல்லவா, ஈழத்து தமிழர் பிரச்சினையை 2009 இல் இவரது தந்தை பார்த்தாற்போல் கடைக்கண்ணால்தான் பார்ப்பாரோ தெரியாது.

No comments:

Post a Comment