இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் 'ஈதுல் பித்ர்' ஈகைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். அருளாளன் அல்லாஹ்வின் கட்டளையையேற்று புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று ஈகை எண்ணத்தோடு இந்நாள் மலர்ந்திருக்கிறது என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தனது செய்தியில், நோன்பிருந்தோர் உள்ளங்களில் வாழ்க்கையில் வசதி குறைந்தோர் பற்றிய கருணை எண்ணங்களைத் தூண்டச் செய்கின்றது. மன்னிப்பு, பொறுமை, தாராளத்தன்மை, மனிதாபிமானச் செயல்கள் மூலமும் ஆத்ம பரிசோதனையின் மூலமும் எமது ஆத்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை இந்த புனித நோன்பு எமக்கு வழங்கியது.
இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்காகவும் அமைதியான வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அல்லாஹ்வின் பாதுகாப்பு, வழிகாட்டல், பலம் மற்றும் உதவிகளை வேண்டிக் கொள்வதற்கான காலம் இதுவாகும்.
நோன்பின் ஊடாக முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவர்களாயுள்ளதோடு அதன் பயனாக சமூகத்துக்கும் நாட்டுக்கும் தங்களது கடப்பாடுகளை நிறைவேற்றச் சக்தி பெற்றவர்களாயும் உள்ளனர்.
இன்று எம்முன்னேயுள்ள பாரிய பொறுப்பு எமது நாட்டையும், நாட்டு மக்களையும் கொவிட்19 தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு வழமை போன்றதல்லாது சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரின் வழிகாட்டல்களைப் பூரணமாக ஏற்று மிகவும் எளிமையான முறையில் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் வீட்டிலிருந்த படியே கொண்டாடுவதாகும்.
தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தின் முயற்சிகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறச் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதே இன்றைய காலச் சூழலில் தேசத்திற்கு நாம் அளிக்கும் பெரும் ஈகையாகும்.
எனவே, மகிழ்ச்சிகரமான இன்றைய தினத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் கடமையை நிறைவேற்றியதனால் அனைத்து மக்கள் மத்தியிலும் அன்பும் சகோதரத்துவமும் ஓங்கச் செய்யும் சமுதாயமாகத் திகழுமாறும் வேண்டுகின்றேன்.
உலகம் முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் மக்களுக்கு எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment