தொழுகையினை தத்தமது வீடுகளில் நிறைவேற்றி, பாதுகாப்பான முறையில் பெருநாளை கொண்டாடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் - இஷாக் ரஹுமான் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

தொழுகையினை தத்தமது வீடுகளில் நிறைவேற்றி, பாதுகாப்பான முறையில் பெருநாளை கொண்டாடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன் - இஷாக் ரஹுமான்

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஒரு மாத காலம் நோன்பிருந்த உலக வாழ் முஸ்லிம்களின் புனித நாளான இப்பெருநாள் தினத்தை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடுமாறு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். 

புனித ஈத்துள் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பினை இக்கொரோனா காலத்தில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பொறுமையாக நிறைவேற்றிய முஸ்லிம்களின் நோன்புகளை கபூல் செய்துகொள்ள வேண்டும் என்று எல்லாம் வள்ள இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

பொறுமை, தியாகம், தாராளத்தன்மை, மனிதாபிமானச் செயல்கள் என்பவற்றை எமது உள்ளங்களில் வேரூன்றச் செய்த புனித ரமழான் பல மாற்றங்களை எம்மில் ஏற்படுத்தி எம்மை விட்டு பிரிந்துசென்று இப்புனித பெருநாள் தினத்தை அடைந்திருக்கின்றோம்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு நமதும், நமது சமூகத்தினதும், நமது நாட்டினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இம்முறை புனித நோன்புப் பெருநாள் தொழுகையினை தத்தமது வீடுகளிலேயே நிறைவேற்றி விட்டு பாதுகாப்பான முறையில் பெருநாளை வீடுகளிலேயே கொண்டாடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் அன்பாய் வேண்டிக் கொள்கிறேன்.

பல வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஏனைய இன மக்களோடு புரிந்துணர்வுடன் கூடிய நல்லதொரு தொடர்பை கட்டிக்காத்து வந்தபோதிலும் ஒரு சில விஷமிகளின் உற்புகுதலால் எமது சமூகத்தின் மீது அவிழ்த்து விடப்பட்டிருக்கும் அவப்பெயர்களை இல்லாதொழிக்கவும், இந்நாட்டின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள பற்றினை வெளிப்படுத்தும் நோக்கிலும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் சுகாதார ஆலோசனைகளையும், கட்டளைகளையும் ஏற்று யாருக்கும் அசௌகரியம் ஏற்படாத வகையில் இப்பெருநாளை கொண்டாடுவது இலங்கை வாழ் முஸ்லிம்கள் நம்மொவ்வொருவரினதும் கடமை என்பதனை உணர்ந்து செயல்படுவோம் என்றும், உலக வாழ் சகல முஸ்லிம்களுக்கும் தனது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment