(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கொவிட்-19 வைரஸ் தடுப்பூசி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் நடுத்தர சாதாரண மக்களே இன்று சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் என ஊழல் ஒழிப்பு தேசிய முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ஊழல் ஒழிப்பு தேசிய முன்னணியின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார தரப்பினர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தற்காக மொரட்டுவை நகர மேயர் சமன்லால் பெர்னான்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தல் விவகாரத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு காணப்படுகின்றமை இதுவொன்றும் முதலும், இறுதியும் அல்ல. அரசியல்வாதிகளின் கண்காணிப்புக்கு அமையவே கொவிட் தடுப்பூசி பெரும்பாலான பகுதிகளில் செலுத்தப்பட்டுள்ளன.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அவர்களுக்கு பொறுப்பாகவுள்ள துறைகளில் உள்ளவர்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
சுகதார தரப்பினருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும், வயது முதிர்ந்தோருக்கும், பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி இதுவரையில் முழுமையாக வழங்கப்படவில்லை.
அனைத்து செயற்பாடுகளிலும் அரசியல் தலையீடு காணப்படுவதை போன்று கொவிட் தடுப்பூசி விவகாரத்திலும் அரசியல் தலையீடு முழுமையாக காணப்படுகிறது.
கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டு சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் நடுத்தர சாதாரண பொதுமக்களுக்கு மாத்திரம் செல்வாக்கு செலுத்துகின்றன. செல்வந்தர்களுக்கு இந்த கட்டுப்பாடு அறிவுறுத்தல்கள் தாக்கம் செலுத்தவில்லை.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. இவர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் சாதாரண நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியிலும், சுகாதார ரீதியிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
No comments:
Post a Comment