(எம்.மனோசித்ரா)
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அரசாங்கம் நாட்டை இன்னும் முடக்காமலுள்ளதா என்ற சந்தேகம் நிலவுகிறது. அடுத்த வாரம் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் நாட்டை முடக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 20 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்தால், மாதத்திற்கு 600 மரணங்கள் பதிவாகக்கூடும். கொவிட் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையானதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையின் காரணமாகவே இன்று 800 இற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது.
கொவிட் கட்டுப்படுத்தலுக்கான ஏதெனும் நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றம் கூட்டப்பட்டால் அதனை நாம் வரவேற்கின்றோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம். ஆனால் அரசாங்கம் அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
துறைமுக நகர சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அபாய நிலையிலுள்ள போதிலும்கூட நாடு முடக்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.
அவ்வாறெனில் அடுத்த வாரம் இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் நாட்டை முடக்கக்கூடிய வாய்ப்புள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக இன்று 800 இற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாளொன்றுக்கு சுமார் 20 மரணங்கள் பதிவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடருமானால் மாதத்திற்கு 600 பேர் கொவிட் தொற்றால் உயிரிழக்க நேரிடும். இவ்வாறு பதிவாகும் ஒவ்வொரு உயிரிழப்புக்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment