கடல் மார்க்கமாக இந்திய மீனவர்கள் அநாவசியமாக இலங்கைக்குள் பிரவேசித்தால் ஆபத்து - எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கடல் மார்க்கமாக இந்திய மீனவர்கள் அநாவசியமாக இலங்கைக்குள் பிரவேசித்தால் ஆபத்து - எச்சரிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

கடல் மார்க்கமாக இந்திய மீனவர்கள் அநாவசியமாக நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனரா என்பது தொடர்பில் கடற்படை மற்றும் பொலிஸார் மிக அவதானத்துடன் கண்காணிக்க வேண்டும். இவ்விடயத்தில் விசேட அவதானத்துடன் செயற்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் தற்போதுள்ளதை விட பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹண இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வைரஸ் மிக வேகமாக பரவுவதாகவே விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறிருப்பினும் இதுவரையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வைரஸ் பரவியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் இந்திய பிரஜைகள் உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவலாகச் செல்கின்றனர். இலங்கை மிகவும் அபாய கட்டத்திலுள்ள நாடாகும். கடல் மார்க்கமாக பெரும்பாலான இந்திய மீனவர்கள் அநாவசியமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே கடற்படையினர் மற்றும் பொலிஸாரிடம் இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனரா என்பது தொடர்பில் மிக அவதானத்துடன் கண்காணிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதன் மூலம் பிரிதொரு வைரஸ் பரவ ஆரம்பித்தால் நாடு என்ற ரீதியில் நாம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே இந்திய பிரஜைகள் என்று சந்தேகிக்கின்ற எந்தவொரு நபரையும் அடையாளம் காணும் பட்சத்தில் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது சுகாதார தரப்பினருக்கு அறிவிக்குமாறு மீனவர்களிடமும் கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

இது தொடர்பில் மிக அவதானமாக செயற்படாவிட்டால் மீண்டும் வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad