மாணவர்கள் பாரிய உள நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள், தடுப்பூசி வழங்கல் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது - இலங்கை ஆசிரியர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 25, 2021

மாணவர்கள் பாரிய உள நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள், தடுப்பூசி வழங்கல் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது - இலங்கை ஆசிரியர் சங்கம்

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் முழுமையாகப் பாதிப்படைந்திருக்கும் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளை சீரமைப்பதற்கு உரிய அதிகாரிகளால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் பாரிய உள நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கல் என்பது மிக முக்கிய பேசு பொருளாகியுள்ளது. இதனை முன்னிறுத்தி மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது.

அதேவேளை பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குமாறு நாம் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றோம். குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது ஃபைஸர் தடுப்பூசி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படாத நிலையில், தடுப்பூசி வழங்கலின் போது முறையான செயற்திட்டமொன்று பின்பற்றப்படாமல் இருப்பதென்பது மிகவும் பாரதூரமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந்த கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வைத்தியர்கள் எமது நாட்டிற்கு வழங்கி வரும் சேவையைப் பெரிதும் மதிக்கின்றோம். எனினும் அதற்காக மாத்திரம் வைத்தியர்கள் விசேட சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெறக்கூடியவர்களாக மாறுவார்களெனின், அதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு உள்வாங்கும்போதும் வைத்தியர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படுகின்றது.

மேலும் தடுப்பூசி வழங்கல் என்பது பெருமளவிற்கு அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி வழங்கலைப் பொறுத்த வரையில், அது யாருக்கு அவசியமாக வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்து அதனடிப்படையிலேயே வழங்க வேண்டும்.

தற்போது ஒட்டு மொத்த பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றன. பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதே அதற்கான தீர்வாக அமையும். நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் ஜுன் மாதமளவில் நிறைவடையும் என்று ஏற்கனவே அதிகாரிகள் கூறினார்கள். எனினும் அது சாத்தியமில்லை என்று வைத்தியர்கள் குறிப்பிட்டார்கள். ஆகவே இந்தத் தடுப்பூசி வழங்கலின் போது முறையான செயற்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.

அடுத்ததாக முழுமையாகப் பாதிப்படைந்திருக்கும் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளை சீரமைப்பதற்கு உரிய அதிகாரிகளால் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. வழமையாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய க.பொ.த உயர்தரப் பரீட்சை இப்போது அக்டோபர் மாதத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. அதேபோன்று டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இப்போது ஜனவரி மாதத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது.

ஆனால் பாடசாலைகளை மீளத்திறப்பதற்கான ஆயத்தங்கள் எவையுமில்லை. அதனால் இப்பரீட்சைகளுக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் உள ரீதியில் பெரிதும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.

பெருமளவான நாட்கள் பாடசாலை நடைபெறாத நிலையில், பரீட்சைக்கான பாடவிதானங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

அதேபோன்று இணையவழியில் பாடங்களைக் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த ஒன்லைன் கற்பித்தல் முறை முழுமையாகத் தோல்வி கண்டிருக்கிறது என்றே கூற வேண்டும். ஏனெனில் வகுப்பொன்றில் இருக்கக்கூடிய 35 மாணவர்களில் ஒன்லைன் வகுப்பிற்கு 10 பேர் மாத்திரமே இணைந்துகொள்கின்றார்கள்.

இதனால் மாணவர்களும் உள ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே ஒன்லைன் கற்பித்தல் முறைக்குப் பதிலாக, அரச தொலைக்காட்சிகளின் ஊடாகப் பாடசாலைக்கல்வி பாடவிதானங்களைக் கற்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நாம் அதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்த போதிலும், இன்னமும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இவை தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment