கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வைரஸ் பரவல் குறைவு, தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது - வைத்தியர் ருவான் விஜயமுனி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 30, 2021

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வைரஸ் பரவல் குறைவு, தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது - வைத்தியர் ருவான் விஜயமுனி

(ஆர்.யசி)

கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் கொவிட்-19 வைரஸ் பரவல் வீதம் குறைவடைந்துள்ளதாகவும், கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் கொவிட்-19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்தும், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் கொழும்பில் மிக வேகமாக வைரஸ் பரவல் காணப்பட்டது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் மிக வேகமாக வைரஸ் பரவ ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது.

ஆனால் தற்போது மூன்றாம் அலையில் மாறுபட்ட வீரியம் கொண்ட வைரஸ் நாட்டில் பரவிக் கொண்டுள்ள நிலையில் கொழும்பில் வைரஸ் பரவலானது அதிகளவில் தாக்கத்தை செலுத்தவில்லை என்றே கூற வேண்டும்.

குறிப்பாக இந்த ஆண்டில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் கொழும்பில் இது வெற்றிகரமான பெறுபேறுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

தடுப்பூசி ஏற்றிய நூறு பேரின் பெறுபேறுகளை எடுத்துப்பார்த்தால் அவர்களில் 92 பேருக்கு தடுப்பூசியின் மூலமாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே கொழும்பை பொறுத்த வரையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது எனலாம்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அல்லது பணியார்களுக்கு கமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டே தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் தற்போது வரையில் ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து என்பத்தி மூன்று பேருக்கு முதலாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன, இவர்களில் எழாயிரத்து எண்ணூறு பேருக்கே இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற வேண்டியுள்ளது. 

எனவே இரண்டாம் தடுப்பூசியை எமக்கு பெற்றுக் கொடுத்தவுடன் உரிய நபர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்படும். ஜூன் மாதம் 8 ஆம் திகதியில் இருந்து மீண்டும் இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்படும். கொவிட் செயலணிக் கூட்டத்தில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment