மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளையும் நடைபெறவில்லை - சுமந்திரனின் கருத்தை மறுக்கும் டெலோ - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 4, 2021

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவித பேச்சுவார்த்தைகளையும் நடைபெறவில்லை - சுமந்திரனின் கருத்தை மறுக்கும் டெலோ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 

ஒன்றிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நேற்று மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நேற்று முன்தினம் ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. 

குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள். அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக் கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது.

No comments:

Post a Comment

Post Bottom Ad