(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டால் அதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அனுமதியளிக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் இத்தகைய கருத்துக்களை வெளியிடும் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மருத்துவப் பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மருத்துவப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய மருந்தொன்றைக் கண்டறிந்திருப்பதாகத் தனிநபரொருவரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
மருத்துவச் சட்டத்தின்படி இலங்கை மருத்துவப் பேரவையின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் மேற்கண்டவாறான கருத்துக்களை வெளியிடுவதாயின், அவர்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் குறித்த மருந்திற்கு கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்தும் என்பதை நிரூபித்து, அதற்கு உரியவாறு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
இலங்கை மருத்துவப் பேரவையின் கீழ் பதிவு செய்திருப்பவர்கள் இத்தகைய கருத்துக்களை வெளியிடும்போது, அவர்கள் மருத்துவச் சட்டத்தின் சரத்துக்களை முறையாகப் பின்பற்றியிருக்கவில்லையெனின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றைக் குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டறிந்திருப்பதாக எவரேனும் கூறினால், அது குறித்த செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் அந்த மருந்திற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பத்திரிகை மற்றும் இலத்திரனில் ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
அதுமாத்திரமன்றி president@mc.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகப் பொதுமக்களும் இத்தகைய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவோ அல்லது இதுகுறித்த சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளவோ முடியும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment