நாட்டை முழுமையாக முடக்க முடியாவிட்டால் முடிவுகள் எடுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் - லக்ஷ்மன் கிரியெல்ல - News View

About Us

About Us

Breaking

Thursday, May 6, 2021

நாட்டை முழுமையாக முடக்க முடியாவிட்டால் முடிவுகள் எடுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் - லக்ஷ்மன் கிரியெல்ல

நாட்டில் கொரோனா அச்சுறுத்தும் இத்தருணத்தில் முழுமையாக நாட்டை முடக்குவது சிக்கலானது என்றால் மாகாணங்களின் ஆளுநர்களுக்கு அதிகாரங்களை வழங்கி மாகாண மட்டத்தில் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கையின் தற்போதைய கொவிட் நிலைமை தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே லக்‌ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா விடயத்தில் அரசாங்கம் அரசியல் தீர்மானங்களையே எடுக்கின்றது. முதலாவது கொரோனா அலை ஏற்படும் போது நாட்டை முடக்குமாறு கோரிய போதும் தேர்தலுக்காக நாட்டை மூடுவதற்கு மறுத்தனர். அப்போதே நாங்கள் கூறுவதை செய்திருந்தால் இப்போது பிரச்சினை இருந்திருக்காது.

நாங்கள் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்க தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அரசியல் ரீதியிலான தீர்மானங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பை வழங்க மாட்டோம்.

நாட்டை முடக்க வேண்டுமென்று நாங்கள் கூறவில்லை. ஆனால் கொவிட்டை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அதனை செய்ய வேண்டும். அதனை செய்தால் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் என்று கூறுகின்றனர். 

அதனை செய்யாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படுமே. இதில் எதனை இந்த நேரத்தில் தெரிவு செய்யப் போகின்றீர்கள். பொருளாதார அழிவையா, சுகாதார அழிவையா நீங்கள் தெரிவு செய்யப் போகின்றீர்கள்.

இந்த நேரத்தில் எங்களின் ஒத்துழைப்பு எதற்கு வேண்டுமென்று அரசாங்கம் கூறினால் தெரிவுக் குழுவை அமைத்தாவது நாங்கள் கதைக்க முடியும். தற்போது இரண்டு மாதங்களில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. அப்படியென்றால் எங்கே தடுப்பூசி. இன்னும் முறையாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment