நூருல் ஹுதா உமர்
கடந்த முறை ரிசாத் பதியுதீன் அவர்கள் கைதானது அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கான ஆதரவினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறுவதனை  நோக்காகக் கொண்டு அமைந்திருந்தது. ஆனால் இம்முறையோ துறைமுக நகரத்துக்கான சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முகமாக,  வாக்கெடுப்பு நெருங்கும் வேளையில் ரிசாத் பதியுதீனை கைது செய்வதை விட முற்கூட்டியே கைது செய்தால் அவருடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கமும்  பழியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே அவர் முற்கூட்டி கைது செய்யப்பட்டிருக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ. எம். ஷிபான் தெரிவித்தார். 
நேற்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
தொடர்ந்தும் பேசிய அவர், ஏலவே நீதிமன்றத்தினால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்ற துறைமுக நகரத்துக்கான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வர இருக்கின்றது. அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது 113 உடன் சாதாரண பெரும்பான்மை போதுமா? என்ற விடயம் வெளிவரவிருக்கின்றது. 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் இடத்து, விஜயதாச ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில  உள்ளிட்டோர் ஆளும் அரசை எதிர்த்து வாக்களிப்பர். இந்த சமயத்தில்  நிச்சயமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி அரசுக்குத் தேவைப்படும்.
ஏற்கனவே 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் மற்றும் தலைவரின் பலதரப்பட்ட விமர்சனங்கள் ஊடாக அச்சத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைமுக விவகாரத்தில் அரசுக்கு கையைவிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தை போக்கும் முன்னேற்பாடுகளுக்காகவே ரிஷாட் பதியுதீனின் கைது இடம்பெற்றிருப்பதனை ஊகிக்க முடிகிறது. 
இது இவ்வாறு இருக்க சட்டமா அதிபரினால்,  ரிஷாட் பதியுதீன் கைதானது நீதித்துறையினால் அன்றி நிறைவேற்றுத்துறையினால் இடம்பெற்று இருப்பதனால்  பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என கூறப்பட்டிருந்த போதிலும் இதுவரையும் அவர் அழைத்துவரப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை.
பாராளுமன்றத்திற்கு ரிசாட் பதியுதீன் வந்தால் தாம் இதுவரை எந்தவிதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை என்றோ அல்லது கடந்த இரண்டு வருடங்களாக என்னிடம் விசாரிக்கும் அதே விடயங்களையே மீள கேட்கிறார்கள். அதே பதிலையே நான் மீளவும் அளித்துக்கொண்டு இருக்கின்றேன்  என்ற விடயங்களையே அம்பலப்படுத்துவார். இது ரிஷாட் பதியுதீன் மீது அனுதாபத்தையும் கைதினை பூச்சியமாகவும் மாற்றி  ஆளும் அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியை கொடுக்கக்கூடியது. 
தலைவர் சிறைப்படுத்தப்பட்ட நிலையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடமானது கூடி, பாராளுமன்ற உறுப்பினர்கள் துறைமுக சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதனாலும், குறித்த சட்டமூலம்  விவாதத்துக்குவர முன்பதாக அவர் பாராளுமன்றம் அழைத்து வரப்பட்டால்,தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசப்படுத்தி விடுவார் என்ற அச்சத்திலும்,  அவர் பாராளுமன்றம் அழைத்துவரப்படாமல் உள்ளார் என்றார்

No comments:
Post a Comment