கொரோனா நெருக்கடிக்கு உரிய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் : அமெரிக்காவில் வசித்த ஜனாதிபதிக்கு இதன் முக்கியத்துவம் தொடர்பில் விளங்கப்படுத்த தேவையில்லை - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய - News View

Breaking

Post Top Ad

Monday, May 10, 2021

கொரோனா நெருக்கடிக்கு உரிய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் : அமெரிக்காவில் வசித்த ஜனாதிபதிக்கு இதன் முக்கியத்துவம் தொடர்பில் விளங்கப்படுத்த தேவையில்லை - முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

(நா.தனுஜா)

ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் போன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பது தொடர்பான தீர்மானங்கள் உரிய நிபுணர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஏனைய நாடுகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஜனநாயகப்பாடம் இதுவாகும். மிக நீண்ட காலம் அமெரிக்காவில் வசித்த ஜனாதிபதிக்கு இதன் முக்கியத்துவம் தொடர்பில் விளங்கப்படுத்தத் தேவையில்லை என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாடு தற்போது பாரிய சுகாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. அந்த நெருக்கடி அனைவருக்கும் பொதுவானதாகும். இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் உயரதிகாரியொருவரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உலகம் எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருடிக்கடி இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதற்குரிய முறையான தீர்வை எட்டாமல் யாரும் முன்னோக்கிப் பயணிக்க முடியாது.

கடந்த காலங்களில் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது ஒவ்வொரு நாடுகளும் அதனை எதிர்கொண்ட விதம் தொடர்பில் குறிப்பிட்டன. 

உதாரணமாக இரண்டாம் உலகப் போருக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் முகங்கொடுத்த போதிலும், அதன்போது அரசியல் ரீதியான வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து நாடுகளும் ஒருமித்து செயலாற்றின. பொதுவான பகைவனுக்கு எதிரான ஏனைய நாடுகள் ஒற்றுமையுடன் இயங்கின. 

அதன் காரணமாகவே அப்போதைய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பிரான்கிளின் ரூஸ்வெல்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸன்ட் சேர்ச்சில் மற்றும் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோருடன் கூட்டிணைந்தார். அவ்வாறு செய்திருக்காவிட்டால் தற்போது பாசிஸம் முழு உலகையும் ஆற்கொண்டிருக்கும்.

அதேபோன்று பல்வேறு அரசியல் கொள்கைகளால் பிளவுற்றிருந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை என்ற கட்டமைப்பொன்றின் கீழ் ஒன்றிணைந்தமையும் இதற்கான மற்றொரு சிறந்த உதாரணமாகும். 

தற்போதைய நெருக்கடி நிலையில் இதனையொத்த உத்தியொன்றைக் கையாள்வது மிகவும் முக்கியமானதாகும். வெவ்வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகள் அல்லது தேவைப்பாடுகளுக்கு இப்போது முக்கியத்துவம் வழங்கப்படக்கூடாது. முதலில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கவேண்டும். அதற்கான அனைத்து உலகும் ஒன்றுபட வேண்டும்.

இது குறித்து கலந்துரையாடுமாறு நான் அண்மையில் மகாநாயக்க தேரர்களிடம் கோரியிருந்தேன். அதேபோன்று இதனைச் செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதியும் பொதுமக்களும் முன்வர வேண்டும் என்று அழைப்புவிடுத்தோம். 

அத்தோடு இந்த ஒருங்கிணைவு என்பது கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad