கொவிட் தீவிரமடைந்தமைக்கு சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் - எல்லை மீறிய பின் நாட்டை முடக்குவதும், பயணத்தடை விதிப்பதும் பயனற்றதாகவே கருதப்படும் : முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

கொவிட் தீவிரமடைந்தமைக்கு சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணம் - எல்லை மீறிய பின் நாட்டை முடக்குவதும், பயணத்தடை விதிப்பதும் பயனற்றதாகவே கருதப்படும் : முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 பெருந்தொற்று நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ளமைக்கு சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளே மூல காரணியாக காணப்படுகிறது. ஒரு சிலரது பொறுப்பற்ற தன்மையினால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்று தற்போது நாட்டில் தீவிரமடைந்துள்ளமைக்கு சுகாதார அமைச்சு முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும். நிலைமை எல்லை கடந்து சென்ற பின்னர் நாட்டை முடக்குவதும், பயணத்தடை விதிப்பதும் பயனற்றதாகவே கருதப்படும்.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் விவகாரம் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டு முறைகேடான முறையில் இடம்பெறுகிறது. சுகாதார தரப்பினருக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் முதலில் தடுப்பூசிகளை செலுத்துமாறு ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம். அரசாங்கம் எமது கருத்துக்களை கவனத்திற் கொள்ளவில்லை. சுகாதார சேவையாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவதாக சுகாதார சேவையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நிலையான சிறந்த திட்டங்களை சுகாதார அமைச்சு செயற்படுத்தவில்லை. கால மாற்றத்திற்கு அமைய சுகாதார அமைச்சின் கொள்கைகளும், சுகாதார பாதுகாப்பு செயற்திட்டங்களும் மாற்றமடைந்தன. இதன் தாக்கத்தை இன்று நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

சுகாதார அமைச்சின் பதவி மற்றும் பொறுப்புக்கள் குறித்து ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டுள்ளோம். இதுவரையில் எவ்வித சாதகமான தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக சுகாதார அமைச்சர்கள் மாத்திரம் எண்ணிலடங்காத வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் எவ்வித பயனும் ஏற்படாது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வரை தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிர்கட்சியின் ஒரு சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளமை சிறந்த கொள்கையாகும். சுகாதார அமைச்சு பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment