அணிசேரா கொள்கையை வெளிநாட்டுக் கொள்கையாக இலங்கை கொண்டுள்ளதால் எந்தவொரு நாட்டை சார்ந்தும் இலங்கை செயற்படாது. துறைமுக நகரில் எந்த நாடும் முதலீடு செய்ய முடியுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுமார் 150 நாடுகளில் இவ்வாறான விசேட பொருளாதார மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. துறைமுக நகரத்தின் மூலமாக நாடு பாரிய முன்னேற்றத்தை எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடக மாநாடு நேற்று ‘The Colombo Port City, Angel or Devil’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இங்கு அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
துறைமுக நகரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் இடம்பெறாது எனவும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு எதிரான சட்டம் இங்கு முழுமையாக செயற்படுத்தப்படுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சட்டவிரோத பணப்பரிமாற்றத்துக்கு துறைமுக நகரம் பயன்படுத்தப்படும் என குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் நாட்டின் அனைத்து சட்டங்களும் இங்கு செயற்படுத்தப்படுவதால் அவ்வாறு நடக்காது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டம் துறைமுக நகரில் முழுமையாக செயற்படுத்தப்படும்.
பொலிஸ், இராணுவம் என்பவற்றுக்கு இங்கு செயற்பட முடியாதென்ற குற்றச்சாட்டிலும் உண்மை கிடையாது. எமது நாட்டின் ஒரு அங்கமாகவே துறைமுக நகரம் உள்ளது.
கடந்த ஆட்சியில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கொண்டுவந்த வர்த்தமானி அறிவித்தலில் துறைமுக நகரின் முழு பிரதேசமும் கொழும்பு நிர்வாக நகரின் பகுதியாக இணைத்து அறிவிக்கப்பட்டது.
நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் பிரதானமானது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிக்கையில், எமது வெளிநாட்டுக் கொள்கை அணிசேரா கொள்கையாகும். நாம் அனைவரதும் நட்பு நாடாக செயற்படுகிறோம். எவருக்கும் எம்முடன் வர்த்தகம் செய்யலாம். எவரேனும் இங்கு முதலீடு செய்வதாக இருந்தால் இரு தரப்பும் அதன் வாயிலாக நன்மையை எதிர்பார்ப்பார்கள்.
வெளிப்படைத் தன்மையான செயற்பாடுகள் பிரதானமானவை. சட்ட ரீதியான கட்டமைப்புக்கு அமைவாக துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரம் அவசியம் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
துறைமுக நகரம் எமது நாட்டின் அங்கமாகும். இதனை அபிவிருத்தி செய்த தரப்புக்கு ஒரு பகுதி குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை நிர்வகிக்கவே ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மக்களால் நியமிக்கப்பட்டவர். அவரே ஆணைக்குழு உறுப்பினர்களை நியமிக்கிறார். இங்கு முதலீடு செய்ய விரும்பும் கம்பனிகள் இங்கு தம்மை பதிவு செய்ய வேண்டும்.
ஆணைக்குழுவுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு சபைக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை போன்ற அதிகாரமே இது. ஒரே கூரையின் கீழ் சகல வசதிகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் ஆணைக்குழுவுக்கு சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எமது வெளிநாட்டு பங்காளருடன் பணியாற்றி வருகிறோம். நாம் குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் மாத்திரம் வர்த்தகம் செய்யவில்லை. புரிந்துணர்வுடன் சகல தரப்பினருடனும் செயற்பட்டு வருகிறோம்.
துறைமுக நகரின் பயன் குறித்து சிந்திக்க வேண்டும்.பொருளாதார ரீதியான பயன்கள் அளப்பரியவை.இவ்வாறான சட்டங்கள் புதியவையல்ல.இதற்கு முன்னர் கல்லோயா அபிவிருத்தி திட்டம், மஹாவலி திட்டம், முதலீட்டு சபை என பட்டியலிடலாம்.
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு எமது வர்த்தக தலைநகரம் என்பதாலே துறைமுக நகரம் கொழும்பில் அமைக்கப்பட்டது. எமக்கு வேறு எந்த இடத்தையும் தெரிவு செய்திருக்கலாம். பாரிய வருமானங்கள் இந்த நகரின் ஊடாக கிடைக்கும்.
சர்வதேச நிதி நகரமாக இது செயற்படும்.2013 இல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை கடந்த அரசு நீடித்தது. 2018 இல் இது தொடர்பான சட்டத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களால் முடியவில்லை.
இந்தச் சட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 05, 06 வருடங்களாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டன. இதிலிருந்து மீண்டு உயர் நீதிமன்ற பரிந்துரைப்படி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் உயர் நீதிமன்ற பரிந்துரையின் படியே சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் விடயங்களை நிறைவேற்றினோம்.
இந்த துறைமுக நகரினூடாக எதிர்வரும் காலங்களில் நாடு பல அபிவிருத்திகளை எட்டும். இங்கு முதலீடு செய்ய வருமாறு உலகிலுள்ள முன்னேற்றகரமான வர்த்தக தரப்பினருக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். சிங்கபூர், டுபாய் உட்பட அநேக நாடுகள் இவ்வாறு உருவாக்கிய நகரினூடாக முன்னேற்றமடைந்துள்ளன என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment