பிரபாகரனால் செய்ய முடியாததை கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆளுங்கட்சியினர் செய்வார்களா ? இல்லையா ? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் நளின் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

பிரபாகரனால் செய்ய முடியாததை கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆளுங்கட்சியினர் செய்வார்களா ? இல்லையா ? பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் நளின்

(எம்.மனோசித்ரா)

ஒற்றையாட்சி நாடான இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் செய்ய முடியாததை, கொழும்பு துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் ஆளுங்கட்சியினர் செய்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், துறைமுக நகர் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்குள் இரு நாடுகள் இரு ஆட்சி என்ற நிலைமை தோற்றம் பெற்று விடும். எனவே இவ்வாறான நிலைமை தோற்றம் பெறாமலிருப்பதற்கு ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிக்கக்கூடாது.

எனினும் பிரபாகரனால் செய்ய முடியாததை இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இவர்கள் செய்து விடுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலாகும்.

இது இவ்வாறிருக்க சட்டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எவ்வித வழக்கினையும் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்கு அரசாங்கத்தின் சார்பில் எவ்வித ஒத்துழைப்புக்களும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

உண்மையில் இது தொடர்பான உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திடமில்லை.

இவ்வாறான பிரச்சினைகளை விட தற்போது கொவிட் பரவல் பாரதூரமான பிரச்சினையாகியுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. வைரஸ் பரவல் ஆரம்பித்த போதே தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் இன்று இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார்.

No comments:

Post a Comment