யுத்தத்தின் போது ஆளும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போல தற்போதும் செயற்பட வேண்டும் : தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Saturday, May 8, 2021

யுத்தத்தின் போது ஆளும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போல தற்போதும் செயற்பட வேண்டும் : தயாசிறி ஜயசேகர

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதை விட, ஒன்றிணைந்து செயற்படுவதே பொறுத்தமானது. யுத்தத்தின் போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போல தற்போதும் செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமை அரசாங்கத்தினதோ அல்லது எதிர்க்கட்சியினதோ பிரச்சினை அல்ல. அனைவரும் முகங்கொடுத்துள்ள நெருக்கடியாகும். இதிலிருந்து ஒவ்வொருவரும் தம்மை பாதுகாத்துக் கொள்ள இயன்றவரை போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

முழு நாட்டையும் முடக்குவதன் ஊடாக மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே போக்குவரத்துக்களை வரையறுத்துக் கொண்டு, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 

அதுமாத்திரமின்றி தடுப்பூசி வழங்குவதே கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறையாகும். 6 மாதங்களுக்கு தடுப்பூசி மூலம் எம்மை பாதுகாத்துக் கொள்வது நாட்டை முடக்கி கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சமமாகும்.

இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. 

எனவே ஒவ்வொருவரும் தத்தமது தனிப்பட்ட பிரச்சினைகளை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயற்படுமாறு இரு தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே அறிவுடைய மக்கள் எதிர்பார்க்கின்றனர். யுத்தத்தின் போது ஒன்றிணைந்து செயற்பட்டதைப் போலவே தற்போதும் செயற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

No comments:

Post a Comment