சாணக்கியனின் கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 26, 2021

சாணக்கியனின் கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டது

மக்களினதும், ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தனது கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிதுள்ளார்.

இன்று (புதன்கிழமை) விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்றையதினம் மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவரிடம் நான் தொலைபேசி ஊடாக முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடுவதற்கான முடிவினை தாங்கள் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நான் கடந்த வாரம் குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு சென்ற போது, பல்வேறு விமர்சனங்களை ஒரு சிலர் முன்வைத்திருந்தனர். இது எங்களுடைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் ஒரு விடயம், அவர்கள் எத்தனையோ இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பினை வழங்குகின்றனர். இதை நீங்கள் மூடுமாறு கோருவது தவறு என ஒரு சிலர் விமர்சித்திருந்தனர்.

உண்மையிலேயே நான் அந்த விடயத்தினை சொன்னதற்கான காரணம், என்னவென்றால், சுமார் 30 பேர் வரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் அது மாவட்டத்திற்குள் பரவக்கூடாது என்ற அடிப்படையிலேயே, அதை தற்காலிகமாக மூடுமாறு நான் கோரியிருந்தேன்.

இந்த நிலையில் நான் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவருக்கு நான் நன்றி கூற வேண்டும். முகநூலில் நான் பதிவிட்ட விடயத்தினை பார்த்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டு பேசி, தாங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீள்பரிசோதனை செய்து அதனை திறப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தினை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad