மட்டக்களப்பு நகரில் பல பாகங்களில் வீதிகள், வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு முகக்கவசம் அணியாதது தொடர்பான சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று (10) முன்னெடுத்தனர்.
இதில் முகக்கவசம் அணியாத 55 பேரை கைது செய்து அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்ட பின் விடுவித்தனர்.
இன்று காலை 8.30 மணியளவில் இரண்டு பஸ் வண்டியில் 20 மேற்பட்ட பொலிஸார் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டனர்.
இவ்வாறு ஒன்றினைக்கப்பட்ட பொலிஸார் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், திருகோணமலை வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், கொக்குவில் வாராந்த சந்தை, மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட பொதுமக்கள் கூடும் பகுதிகளை சுற்றிவளைத்து முகக்கவசம் அணியாத வர்த்தகர்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள், வீதிகளில் முகக்கவசம் சரியான முறையில் அணியாது சென்ற சுமார் 55 பேர் வரை கைது செய்து அவர்களை பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காந்தி பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்த அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment