ரூ. 5,000 கொடுப்பனவு நாளை முதல் ஆரம்பம் : தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான பொதி - News View

About Us

About Us

Breaking

Monday, May 31, 2021

ரூ. 5,000 கொடுப்பனவு நாளை முதல் ஆரம்பம் : தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான பொதி

கொரோனா வைரஸ் சூழ்நிலையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் அன்றாட வருமானத்தை ஈட்டிக்கொள்ள தொழிலுக்குச் செல்ல முடியாத குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு நாளை (02) முதல் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கென அரசாங்கம் 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்க ஊழியர்கள் அல்லாத குறைந்த வருமானத்தை பெற்றுக் கொள்ளும் குடும்பங்கள், சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் மற்றும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக அன்றாடம் தொழிலுக்கு செல்ல முடியாதுள்ள அனைவருக்கும் இந்த ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ அனர்த்தம் காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கும் மேற்படி 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

5,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான முறையான பட்டியல்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் தற்போது தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு 5,000 ரூபாவை பெற்றுக் கொள்ளவோ அல்லது ஐயாயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளவோ மற்றும் நடமாடும் சேவை மூலம் வாகனங்களில் விற்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்ளவோ முடியாத நிலையில் அரசாங்கம் இந்த பத்தாயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய விசேட பொதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கு வழங்கிவருகிறது என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை 5,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக் கொள்வதிலோ அல்லது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதிலோ அத்துடன் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்ளும் போதோ நாட்டு மக்கள் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள சுகாதார வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா வைரஸ் பரவல்தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் நிலையில் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம் என்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொது மக்கள் அதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment