இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் ஜனாதிபதி முன்னியில் சத்தியப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 26, 2021

இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் ஜனாதிபதி முன்னியில் சத்தியப்பிரமாணம்

பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் இலங்கையின் 48ஆவது சட்டமா அதிபராக இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சஞ்சய ராஜரத்தினத்தை சட்டமா அதிபராக நியமிக்க பாராளுமன்றப் பேரவை கடந்த மே 21ஆம் திகதியன்று அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள சஞ்சய ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

இவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா இராஜரட்னத்தின் மகனாவார். அத்துடன் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட இவரது பாட்டனார் டீ. ராஜரத்தினம் முடிக்குரிய வழக்கறிஞராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஞ்சய ராஜரத்தினம் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.

இவர் தனது சட்டக் கல்வியை இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்று, 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.

1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரச சட்டவாதியாக சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து, 1998ஆம் ஆண்டு சிரேஷ்ட அரச சட்டவாதியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2005ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2018ஆம் ஆண்டு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றதுடன், 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிபுரிகின்ற காலப் பகுதியில் மத்திய வங்கி, மொறட்டுவை பல்கலைக்கழகம், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் கல்வி அமைச்சு மற்றும் பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு உட்பட பல்வேறு அரச நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், 2019ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற போது சட்டவரைஞர் குழுவின் உறுப்பினராகவும் விளங்கியுள்ளார். சில விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் சட்ட விடயங்களை இவர் கையாண்டுள்ளார்.

2004ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பெருநிறுவன பிரிவை மேற்பார்வை புரியும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். 2005ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் பிராதுப்பிரிவின் தலைமை உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். 2019 ஒக்டோபர் மாதம் முதல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான கோப்புகளை கண்காணிக்கும் பிரிவுக்கு பொறுப்பானவராக கடமையாற்றிய அதேவேளை, துரித கதியில் வழக்குகளை தாக்கல் செய்வதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிவில் பிரிவுக்கு பொறுப்பானவராகவும் இவர் பல ஆண்டுகளாக கடமையாற்றி வருகின்றார்.

இவர் 1997ஆம் ஆண்டிலிருந்து உயர்நீதிமன்றத்தில் பல்வேறு முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் அரசை பிரதிநிதித்துவம் செய்து தோன்றியிருக்கின்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் எழுத்தாணை வழக்குகள் உட்பட பல வழக்குகளிலும் தோன்றியிருக்கின்றார். பாராளுமன்ற சட்டமூலங்கள் தொடர்பிலான விசேட தீர்மானத்தை மேற்கொள்ளும் வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.

மும்மொழி ஆற்றலும் சட்ட வல்லமையும் மிக்க இவர் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஒஸ்ரியா, அவுஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற சட்ட மாநாடுகள் மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நாட்டையும் சஞ்சய ராஜரத்தினம் பிரதிநிதித்துவம் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

சஞ்சய ராஜரத்தினத்தின் பாரியார் தர்மினி இராஜரட்னம் லங்கா (தனியார்) மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment