கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க தற்காலிக நடவடிக்கை - போக்குவரத்தை நம்பியுள்ள சுமார் 200 குடும்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, May 28, 2021

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க தற்காலிக நடவடிக்கை - போக்குவரத்தை நம்பியுள்ள சுமார் 200 குடும்பங்கள்

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்படும் பாலமானது இறுதியாக ஏற்பட்ட பாரிய மழைவீழ்ச்சி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் குறித்த பாலத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டிருந்தது.

மேலும், இந்த பாலமானது வாகனங்கள் சென்று வரும் சூழலில் உடைந்து விழும் அபாய நிலை ஏற்பட்டிருந்தது.

குறித்தநிலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் கள ஆய்வினை மேற்கொண்டிருந்ததுடன், தற்காலிகமாக பாலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.

அண்ணளவாக 30 அடி நீளம் கொண்ட குறித்த பாலமானது வெள்ளத்தினால் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலை காரணமாக ஏற்கனவே 2500 மண்மூடைகளினால் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், தற்போது ஏற்பட்டுள்ள உடைவினை பாதுகாப்பதற்காக 750 பைகளில் மண் நிரப்பப்பட்டு பாதுகாப்பதற்கான தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

குறித்த பாலத்தினை பாதுகாப்பதற்காக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் இராணுவத்தினரின் உதவியை கேட்டுள்ள நிலையில், குறித்த பணியில் வினாவோடை இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் பணியில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை குறித்த பாலத்தினை பயன்படுத்தி வினாவோடை கிராமத்தில் உள்ள சுமார் 200 குடும்பங்கள் நம்பி வாழ்வதாகவும், பாலம் உடைந்து போக்குவரத்து தடைப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த குடும்பங்கள் போக்குவரத்தின்றி தனிமைப்பட வேண்டிய அபாயநிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டு அதனை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும், குறித்த பாலம் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என நம்புவதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பருவ மழை ஆரம்பிக்கும் முன்னராக குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்து தருமாறு பிரதேச மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment