சீன நகரங்களை புரட்டிப்போட்ட புயல்கள் : 12 பேர் பலி, 300 க்கும் மேற்பட்டோர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 16, 2021

சீன நகரங்களை புரட்டிப்போட்ட புயல்கள் : 12 பேர் பலி, 300 க்கும் மேற்பட்டோர் காயம்

சீனாவின் இரு நகரங்களில் இரவு வேளையில் வீசிய புயலில் சிக்கி 12 போ் பலியாகியுள்ளதுடன், 300 க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 23.9 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. 

இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான கட்டுமானங்கள் சரிந்து விழுந்தன.‌ 100 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. புயலைத் தொடர்ந்து உகான் நகரில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. இதில் வீதிகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

புயல் மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உகான் நகரில் 27 வீடுகள் சரிந்து விழுந்தன. 130 வீடுகள், 8,000 சதுர மீட்டா் பரப்பளவில் நடைபெற்று வந்த சிறப்பு பொருளாதார மண்டல கட்டுமானப் பணிகள் முற்றிலும் சேதமடைந்தன.

இந்தப் புயலால் மின்மாற்றிகள் சரிந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 26,600 வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள சூஸோ நகரில் வீசிய புயலில் 84 வீடுகள், 17 நிறுவனங்களின் கட்டிடங்கள் சேதமடைந்தன. இங்கும் புயலால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நகரில் புயல் வீசுவது மிகவும் அரிதாகும்.

இரு நகரங்களிலும் புயலில் சிக்கி 12 பேர் பலியாகினா், 300 க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment