ஆப்கானிஸ்தானில் காபூலின் ஷகர்தரா மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளிவாயலில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பள்ளிவாயலுக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது.
இதில் அந்த பள்ளிவாயலில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இமாம் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகள் தாங்கள் இந்த தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இதனிடையே நோன்புப் பெருநாளையொட்டி அங்கு 3 நாட்களுக்கு தலீபான்கள் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்த முதல் நாளான வியாழக்கிழமை அன்று குண்டூஸ் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன் கடந்த வாரம் காபூலிலுள்ள மகளிர் பாடசாலைக்கு அருகே நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான மாணவிகள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டதும், 160 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment