1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழக்கில் நாமே வெற்றி கொள்வோம் : 1,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் - ஜீவன் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழக்கில் நாமே வெற்றி கொள்வோம் : 1,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் - ஜீவன் தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் எதிர்வரும் 05ஆம் திகதி நாமே வெற்றி கொள்வோமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாள் சம்பள முறைமைக்குப் பதிலாக நிரந்தர சம்பளம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பெருந்தோட்ட பிரதேசங்களில் ஒரு இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக அடுத்த மாதம் 1,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

தொழில் அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,000 ரூபாய் சம்பளம் தொடர்பில் எந்த சிக்கலும் ஏற்படாமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும். 

தற்போது பெரும்பாலான தோட்டங்களில் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் சில தோட்டங்களில் மேலதிக கொழுந்து பறிக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன. 1,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு மேலதிக கொழுந்தும் எந்த சம்பந்தமும் கிடையாது. 

ஏற்கனவே 750 ரூபாவாக இருந்த அடிப்படை சம்பளமே தற்போது 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

அதனை முறையாக பின்பற்றாத தோட்டக் கம்பனிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். விரைவில் அந்த பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment