வடமராட்சி கிழக்கு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (16) காலை வடமராட்சி முள்ளிப்பகுதியில் மணல் கடத்தலினை முறியடிப்பதற்காக யாக்கரை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமை சேர்ந்த அதிரடிப்படையினர் பதுங்கி இருந்துள்ளனர்.
இதன்போது கெப் ரக வாகனமொன்றில் வந்த குறித்த சந்தேகநபர்களை STF இனர் நிறுத்துமாறு செய்த சமிக்ஞையை மீறி செல்ல முற்பட்டுள்ளதோடு, அவர்களை நிறுத்துவதற்காக ஆணி அறையப்பட்ட பலகை உள்ளிட்ட தடைகளை STF யினர் இட்டுள்ளனர்.
ஆயினும் அதனையும் மீறி சந்தேகநபர்கள் பயணித்துள்ளதோடு, இதன்போது STF வீரர் ஒருவர் வாகத்தால் மோதப்பட்டு காயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த வாகனத்தின் மீது STF தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பழனி மிகுந்தன் (28), ஜெயக்குமார் சந்திரகுமார் (30) ஆகிய குடும்பஸ்தர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தில் விசேட அதிரடிப்படை வீரரான செனவிரட்ன என்பவர் கால் பகுதியில் படுகாயமுற்ற நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(மயூரப்பிரியன், ஜெகதீஸ் சிவம்)
No comments:
Post a Comment