தடுப்பூசியை பெற்றவர்கள் மாத்திரமே உம்ராவுக்கு அனுமதிக்கப்படுவர் - அறிவித்தது சவூதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

தடுப்பூசியை பெற்றவர்கள் மாத்திரமே உம்ராவுக்கு அனுமதிக்கப்படுவர் - அறிவித்தது சவூதி

கொரோனா தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றவர்கள் மாத்திரமே முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தில் உம்ரா வழிபாட்டில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் மூன்று பிரிவுகளைச் சேர்ந்தோர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருமுறை தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டவர்கள், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முதல் தடுப்பு மருந்தை பெற்றவர்கள் மற்றும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களாவர்.

இந்த வகைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே உம்ரா வழிபாட்டுக்கும் அதேபோன்று மக்கா பெரிய பள்ளிவாசலில் தொழுவதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ரமழான் மாதத்தில் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று அது குறிப்பிட்டுள்ளது. 

மதீனா நகரில் உள்ள அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளிவாசலுக்கும் இந்தக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 393,000 க்கும் அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 6,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad