பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு ஏப்ரலில் முதல் தடவையாக கிடைக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு ஏப்ரலில் முதல் தடவையாக கிடைக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதத்தில் முதல் தடவையாக கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சகல பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடைகள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வருண லியனகே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு குறித்து கேள்வி எழுப்பினார்.

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தெரியப்படுத்தியுள்ளது. ஆனாலும் அரசு நிருவகிக்கும் தோட்டங்களிலும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை என்றே கூறப்படுகின்றது. எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அதிகளவில் சிரமங்களை எதிர்கொண்டார்.

பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சம்பள நிர்ணய சபையின் மூலமாக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம்.

பெருந்தோட்ட கம்பனிகள் வழக்கு தொடுத்திருந்த போதிலும் நேற்று எமக்கு சாதகமான தீர்ப்பு ஒன்று கிடைக்கப் பெற்றது. சம்பள விடயங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய அனுமதியை எமக்கு நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ளது.

எனவே ஏப்ரல் மாதத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் முதல் தடவையாக கிடைக்கும். இது அரசங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். 

சகல பெருந்தோட்ட கம்பனிகளும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad