(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்றும் பல்வேறு பொய்களை மக்கள் மயப்படுத்தி விசாரணைகளுக்கு அழுத்தங்கள் கொடுத்து சமூகத்தின் பார்வையை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சகலருக்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார்.
பாராளுமன்றம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில், சபாநாயகர் அறிவிப்புக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பின் போதே அவர் இவற்றை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனையில் பங்குபற்றியிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை மிகவும் கவலையுடன் நினைவு கூறுகின்றோம்.
இப்பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களை நினைவு கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென பிரார்த்திருக்கிறோம்.
அதேபோன்று உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் எமது ஆழந்த சோகத்தையும் இத்தருணத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய சாட்சியங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்ய நாம் தயாரில்லை என்ற போதிலும், இந்த விடயத்தில் நீதியை பெற்றுக் கொடுக்க ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் அனைத்து தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அப்பால் இடம்பெறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் மற்றும் ஏனைய விசாரணைகளை எவ்வித தடைகளுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செய்து கொடுத்துள்ளார்.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் குறித்த திணைக்களங்களின் ஊடாக உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புகிறோம் என்றார்.
No comments:
Post a Comment