பங்காளிகளின் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வு, மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் கிடையாது - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 25, 2021

பங்காளிகளின் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வு, மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் கிடையாது - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பங்காளி கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் போது மாகாண சபைத் தேர்தல் குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படும். ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக மாத்திரம் தீர்வு காண முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மே தின கூட்டங்கள், பேரணிகள் தடை செய்யப்படவில்லை. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. சுகாதார தரப்பினரது தீர்மானங்களுக்கு அமையவே மே தின கூட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. என்பதை எதிர் தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுமக்களை ஒன்று கூட்டாத வகையில் தொழினுட்ப வசதிகள் ஊடாக மே தின நிகழ்வுகளை பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் முன்னெடுக்க பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரும் கூட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும். கூட்டணியில் கொள்கைக்கு முரணாக பங்காளி கட்சியின் ஒரு சிலர் கடந்த காலங்களில் செயற்பட்டு தேவையில்லா பிரச்சினைகளை தோற்றுவித்தார்கள்.

கூட்டணியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்காளி கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தைக்கு கூட்டணியின் 10 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. பிரதமருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட அனுமதி கோரியுள்ளார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரம் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

மாகாண சபைத்  தேர்தலை பிற்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பில் பல மாறுபட்ட யோசனைகள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளன. பங்காளி கட்சித் தலைவர்களுக்கும், பிரதமருக்கும் இடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது மாகாண சபைத்  தேர்தல் குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மற்றும், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களுக்கும் இடையிலான பேச்சவார்த்தை கடந்த 19 ஆம் திகதி இடம் பெற்றது.

கூட்டணியில் எழுந்துள்ள முரண்பாடுகள், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது. கூட்டணியின் ஊடாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலும் அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இரு தரப்பு யோசனைகள் கலந்தாலோசிக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment