பெண்ணிலை வாதம் முன்னிற்கின்ற இன்றைய கால கட்டத்தில் பெண் இலக்கியவாதிகள் மிக அரிது - அஸ்மியா அஷ்ரபின் நூல் வெளியீட்டு விழாவில் ஏ.எல்.எம்.சலீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 13, 2021

பெண்ணிலை வாதம் முன்னிற்கின்ற இன்றைய கால கட்டத்தில் பெண் இலக்கியவாதிகள் மிக அரிது - அஸ்மியா அஷ்ரபின் நூல் வெளியீட்டு விழாவில் ஏ.எல்.எம்.சலீம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பெண்ணிலை வாதம் முன்னிற்கின்ற இன்றைய கால கட்டத்தில் பெண் இலக்கியவாதிகள் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகின்றார்கள் என முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளரும் பொதுச் சேவை ஆணைக் குழு உறுப்பினருமான ஏ.எல்.எம் சலீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அஸ்மியா அஷ்ரப் எழுதிய சிறுகதை தொகுப்பான 'நிழலாய் அவள்' நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர், நான் பிரதேச செயலாளராக இருக்கின்ற போது அரச ஊழியர்களுக்கிடையிலே இடம்பெற்ற இலக்கியப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற ஓர் எழுத்தாளர் அஷ்ரப் என்றால் அது மிகையாகாது. நான் இருக்கின்ற போதே அவர் அந்தப் பரிசினைப் பெற்றுக்கொண்டார். அது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதே வழியிலேதான் அவரது மனைவி அஸ்மியா அஷ்ரப் 'நிழலாய் அவள்' என்ற சிறுகதைத் தொகுதியை இன்று வெளியிட்டு இருக்கின்றார்.

ஓர் எழுத்தாளர் ஒரு புத்தகத்தை வெளியிடுவது என்பது பிரசவத்துக்கு சமமானது. மிகவும் சிரமப்படுகின்ற வேதனையான விஷயம். அதிலும் குறிப்பாக அதனுடைய செலவுகள் மற்றும் இதர விடயங்களை பார்க்கின்ற போது அது பாரியதொரு வேலைத்திட்டமாக இருக்கின்றது.

அந்த வகையில் இந்த நூல் அதிலும் குறிப்பாக சிறுகதை நூல் வெளிவருவது பாரியதொரு முயற்சி யாகத்தான் நான் கருதுகிறேன். இந்த நூலை வெளியிடுவதிலே அவரது கணவர் நிழலாய் இருந்திருப்பார் என்று நினைக்கின்றேன். 'நிழலாய் அவள்' என்ற அந்தப் புத்தகத்தின் பெயர் அவரது கணவருக்கு கூறியிருக்கலாம். அதாவது அஷ்ரப் செல்லுமிடமெல்லாம் 'அவள் நிழலாய்' இருப்பாள் என்பதன் அர்த்தமாக இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என நான் ஊகமாகக் கருதுகிறேன்.

இலக்கியத் துறையிலே பல பெண்கள் சாதனைகள் புரிந்தாலும் புத்தகங்கள் வெளிவருவது மிகவும் குறைவாக இருக்கின்றது. அந்த வகையில் இன்று வெளிவருகின்ற இந்த சிறுகதை நூல் காத்திரமான நூலாக இருக்கின்றது. இதனை அனைவரும் வாங்கி வாசிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நூலின் முதற்பிரதியை நூலாசிரியர் அஸ்மியா, தனது கணவரான எம்.ஐ.எம். அஷ்ரபிடம் கையளித்தார்.

இதுவே சாய்ந்தமருதில் பெண் எழுத்தாளரால் வெளியிடப்பட்ட முதலாவது சிறுகதை நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பிரபல இலக்கியவாதிகளான பிரபல கலைஞர் அஸ்வான் மௌலானா மற்றும் பிரபல கவிஞர் என்.எம்.அலிக்கான் ஆகியோரின் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.

இந்நிகழ்வில், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி பீர் முஹம்மட், கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ பஷீர், ஆசிரியர் நவாஸ் சௌபி, பிரபல கவிஞர் கே.எம்.ஏ.அஸீஸ், மருதம் கலைக் கூடலின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா, அதன் பிரதித் தலைவர் என்.எம். அலிக்கான் மற்றும் செயலாளர் ஊடகவியலாளர் ஸாகிர் உட்பட ஆசிரியர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், நூலாசிரியரது குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகவியலாளர் ஏ.எம்.இன்சாப் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment