புத்தாண்டை முன்னிட்டு கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டு வருகின்றது - வைத்தியர் சுசி பெரேர - News View

About Us

About Us

Breaking

Thursday, April 1, 2021

புத்தாண்டை முன்னிட்டு கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டு வருகின்றது - வைத்தியர் சுசி பெரேர

(செ.தேன்மொழி)

தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பான சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்று நிரூபமானது கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தை விட மாறுபட்டதாக காணப்படுவதுடன், இதன்போது கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான அனுபவங்கள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சுசி பெரேர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுற்றுநிரூபமொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சுற்று நிரூபமானது கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பில் மக்கள் பெற்றுள்ள ஒரு வருட கால அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படவுள்ளது.

இதன்போது பொருளாதார செயற்பாடுகளுக்கு முதலிடம் வழங்கப்படவுள்ளது. வைரஸ் பரவல் இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், மீண்டும் வைரஸ் கொத்தணி உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதன் காரணமாகவே இவ்வாறான ஒரு சுற்றுநிரூபமொன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில் இடம்பெறும் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளை வழமை போன்றே குடும்பத்தினருடன் இணைந்து கடைப்பிடிக்க முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளில் அதிகளவான நபர்களை இணைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். புதுவருட பிறப்பில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

எனினும் விளையாட்டு நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடாத்த முடியும். இதன்போது சரூக இடைவெளியை பேணுயிருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கமைய வழமையாக இடம்பெறும் கயிறு இழுத்தல், தலையனை சண்டையிடல் போன்ற விளையாட்டுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இந்நிலையில் கண்களை கட்டிக் கொண்டு விளையாடும் விளையாட்டுகளின் போது, கண்ணை மறைக்கப் பயன்படுத்தும் துணியை ஒருவருக்கு ஒரு துணி என்ற வகையில் பயன்படுத்த முடியும்.

புது வருட விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டு குழுவினர், வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் நடாத்தக்கூடிய விளையாட்டுகளை மாத்திரம் ஒழுங்கு செய்யலாம். 

எனினும் இந்த நிகழ்வுகளின் போது முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணல், கைகளை சுத்தம் செய்துக் கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த விளையாட்டுகளில் பங்குபற்றக் கூடியவர்கள் தொடர்பிலும் தெளிவுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

இதேவேளை பொருட்கள் கொள்வனவின் போது, விரைவில் தமக்கு அவசியமான பொருட்களை பெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும். இந்த செயற்பாடுகளுக்காக மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளை தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது.

கேள்வி : சீனாவிலிருந்து வழங்கப்பட்ட தடுப்பூசிகளை இந்நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பதில் : சீனாவிலிருந்து நன்கொடையாகவே இந்த தடுப்பூசிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் இதனை இங்குள்ள சீன மக்களுக்குதான் செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

எனினும் இந்த தடுப்புசி தொடர்பில் எமது நிபுணர் குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை. அதனால் எம்நாட்டு மக்களுக்கு அந்த தடுப்புசியை வழங்க தீர்மானிக்கவில்லை. இங்கிருக்கும் சீனர்களுக்கே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

கேள்வி : கொவெக்ஸ் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறாமைக்கான காரணம் என்ன?

பதில் : கொவெக்ஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கும் விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் மே மாதத்திற்குள் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு கிடைக்கப் பெற்றவுடனே அது மக்களுக்கு வழங்கி வைக்கப்படும்.

இந்த தடுப்பூசிகள் அனைத்தையும், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க முடியாது. தடுப்பூசிகள் தொடர்பில் முதலில் பரிசொதனை செய்ய வேண்டும். சில தடுப்பூசிகள் ஒவ்வொரு வயது தரப்பினருக்கே பொறுத்தமாக உள்ளன. அதனால் தடுப்பூசிகள் தொடர்பில் பரீட்சித்து பார்த்ததன் பின்னரே அதனை மக்களுக்கு செலுத்த அனுமதிக்க முடியும்.

கேள்வி : சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?

பதில் : ஆம், சுகாதார சுற்று நிரூபத்துக்கு புறம்பாக இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் சுகாதார பிரிவினரும், பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பர்.

கேள்வி : தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தனியார் வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் எப்போது அறிவிக்கப்படும்?

பதில் : தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த எண்ணிக்கையில் மாணவர்களை இணைத்துக் கொண்டு வகுப்புகளை நடத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்.

No comments:

Post a Comment