10 ஆம் திகதி முதல் விசேட சுற்றிவளைப்புக்களில் பொலிஸார் - சாரதிகளை அடையாளம் காண கருவிகள் - 24 மணித்தியாலயத்தில் 9 பேர் உயிரிழப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 6, 2021

10 ஆம் திகதி முதல் விசேட சுற்றிவளைப்புக்களில் பொலிஸார் - சாரதிகளை அடையாளம் காண கருவிகள் - 24 மணித்தியாலயத்தில் 9 பேர் உயிரிழப்பு

(செ.தேன்மொழி)

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக எதிர்வரும் சனிக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணுவதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பண்டிகைக்கால நிகழ்வுகளின் போதோ, வேறொரு பணிக்காகவோ வெளியில் செல்லும் போது மதுபோதையில் இருக்கும் சாரதிகளின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதன்போது மதுபானம் அருந்தாத சாரதிகளின் வாகனங்களை பயன்படுத்துவதே சிறந்தது.

வாகன விபத்துக்கள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்திலும், எஞ்சிய இருவர் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மற்றும் இரு பாதசாரதிகளும் உள்ளடங்குகின்றனர்.

தற்போது நாள் ஒன்றுக்கு 7 - 8 பேர் வரை வாகன விபத்துகளினால் உயிரிழப்பது சாதாரண விடயமாக மாறியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். அதன் காரணமாகவே மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. 

இதன்போது போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் கண்காணிப்படுவதுடன், அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் குற்றம் புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad